Wählen Sie Ihre Sprache aus / உங்கள் மொழியை தெரிவுசெய்யுங்கள்:

Homeஎம்மைப்பற்றி

எம்மைப்பற்றி

தமிழீழத்தில் நடைபெறும் இனவிடுதலைப்போராட்டக் காரணிகளினால் 80 களின் ஆரம்பத்தில் புகலிடம் தேடித் தமிழர்கள் உலகின் பல நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தார்கள். அவர்களில் கணிசமான தொகையினர் யேர்மனியிலும் குடியேறினார்கள். தாயகத்தின் விடுதலை நீண்டுசெல்கின்ற நிலையை கருத்திற்கொண்டு தமிழ்ச்சிறார்களுக்கு எமது மொழியையும் பண்பாடுகளையும் போதிக்கின்றபணியை தமிழினப்பற்றாளர்கள் தாம் வாழ்கின்ற வட்டாரங்களில் ஆங்காங்கே முன்னெடுத்தனர். அவர்களின் தனித்துவமான முயற்சிகள், தொடர்ச்சியான தமிழ்வளர்ப்புப்பணிக்குப் பல சிரமங்களை முன்வைத்தது.

ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நிறுவனமாக்கலினூடாக இப்பணியை முன்னெடுக்கும் நோக்கத்தில் தமிழினப்பற்றாளர்களின் கூட்டுமுயற்சியினால் 1990 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில்; எமது கல்வி நிறுவனம் உதயமாகியது. நிறுவனத்துக்கு உலகத்தமிழர் இயக்கம் என்ற பெயரும். கல்விநிலையங்களுக்குத் தமிழாலயம் என்ற சிறப்பான பெயரும் சூட்டப்பட்டது. யூச்சன் நகரில் முதலாவது தமிழாலயம் உருவாக்கப்பட்டது. ஆரம்பித்த ஆண்டிலேயே 12 தமிழாலயங்கள் உருவாகின. அதன் தொடர்ச்சியாகத் தமிழர்கள் செறிந்து வாழும் நகரங்களில் தமிழாலயங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆரம்பித்த நான்கு ஆண்டுகளுக்குள் யேர்மனியில் வடக்கே கம்பூர்க் நகரிலிருந்து தெற்கே முன்சன் வரையிலான நிலப்பரப்புக்குள் 80 க்கு மேற்பட்ட தமிழாலயங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

யேர்மனியப் பாடசாலைகளிலும் வேறு உதவி நிறுவனங்களின் மண்டபங்களிலும் தமிழாலயங்கள் நடைபெற்றுவருகின்றன. வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிவரை யேர்மனியப்பள்ளிகளில் தமது அடிப்படைக் கல்வியைக் கற்கும் தமிழ் மாணவர்கள் வாரவிடுமுறைகளில் தமிழாலயத்தில் தமது தாய்மொழியான தமிழையும், தமது கலை, பண்பாடுகளையும் கற்கின்றார்கள். 2009 ஆம் ஆண்டு; யேர்மனி முழுவதிலும் 130 க்கு மேற்பட்ட தமிழாலயங்கள் இயங்குகின்றன. அங்கே 6500 க்கு மேற்பட்ட தமிழ் மாணவர்கள் கற்றுவருகின்றனர். இவர்களுக்கு 950 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் ஊதியமற்ற முறையில் தமிழ் மொழியைக்கற்பித்துவருகின்றார்கள்.

130 தமிழாலயங்களையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் நிர்வகித்துவருகின்றோம். செயற்பாடுகளைச் சிறப்பாகவும் சிரமமின்றியும் நடைமுறைப்படுத்தும் நோக்கில் ஒரு நடுவச் செயலகம் அமைக்கப்பட்டு அங்கே நிர்வாகப்பிரிவு, நிதிப்பிரிவு, கல்விப்பிரிவு, தமிழ்த்திறன்பிரிவு, கலைப்பிரிவு, விளையாட்டுப்பிரிவு போன்ற செயற்பாடுகளுக்குத் தனித்தனியான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதையடுத்து நாடுமுழுவதிலும் பரந்துள்ள தமிழாலயங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கென 12 செயற்பாட்டாளர்களும், தமிழாலயங்களுக்கெனத் தனித்துவமான நிர்வாகமும் நியமிக்கப்பட்டுள்ளதுடன் பெற்றோர்கள் சார்பாகப் பெற்றோர் பிரதிநிதிகளும் தெரிவாகிச் செயற்பட்டுவருகின்றனர்.

எமது தமிழாலயங்களில் பயிலும் 6500 க்கு மேற்பட்ட மாணவர்கள் தமக்குக்கிடைக்கின்ற ஓய்வு நேரங்களில் தமிழையும் கலையையும் பயின்று இரட்டிப்புச் சுமைகளுக்கு மத்தியில் வாழ்ந்தாலும் 65 வீதத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் யேர்மனியின் உயர்நிலைப்பள்ளிகளான Gymnasium, Realschule ஆகியவற்றில் சிறப்பாகத்தமது அறிவியற்கல்வியைக்கற்றுவருவது பெருமைக்குரியவிடயமாகும். தமிழாலயங்களில் 11 ஆம் வகுப்புவரை தமிழ்பயின்று பின்னர்; தமது உயர்கல்விக்காக பல்கலைக்கழகங்களுக்குச் சென்ற மூத்த மாணவர்கள் தமது ஓய்வு நேரமாகிய வாரவிடுமுறைநாட்களில் தமிழாலயங்களின் இளைய மாணவர்களுக்கு தமிழ்கற்பித்துவருகின்றனர். தமிழாலயங்களிலுள்ள 950 க்கு மேற்பட்ட ஆசிரியர்களில் 200 க்கு மேற்பட்டவர்கள் யேர்மனியில் பிறந்து தமிழாலயங்களில் தமிழ்பயின்றவர்களென்பது குறிப்பிடத்தக்கது.

பண்பட்ட நிலத்துப் பயிர் செழித்தோங்கும் என்பது பொய்யாமொழி. யேர்மனியின் தமிழாலயங்கள் இதற்கு ஒரு சான்று.

நிகழ்வுகளின் படத்தொகுப்பு

Free business joomla templates