Wählen Sie Ihre Sprache aus / உங்கள் மொழியை தெரிவுசெய்யுங்கள்:

யேர்மனியில் தமிழாலயங்கள் ஆரம்பித்து தமிழ்க் கல்வி முன்னெடுக்கப்பட்ட அதே நேரம், தமிழர் கலை, கலாச்சாரத்தின் அவசியம் உணரப்பட்டது. எமது சிறார்கள் பல்லினக் கலாச்சாரத்துள் சிக்கி அவலப்படுவதிலிருந்து காப்பாற்றப்படவேண்டிய தேவை புலம்பெயர்வாழ் பெற்றோரின் கடமையாகவும் இருந்தது. எனவேதான் தமிழாலயங்களில் 1991 இன் ஆரம்பத்திலிருந்து தமிழ்க்கலை வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.

இன்று 46 தமிழாலயங்களில் நடனம், வாய்ப்பாட்டு, வயலின், வீணை, மென்முழவு, சுரத்தட்டு ஆகிய கலைகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இக் கலைகள் 36ற்கும் மேற்பட்ட ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகின்றன. தமிழாலயங்களில் 600 க்கு மேற்பட்ட மாணவர்கள் தமிழ்க்கலைகளை கற்று வருகிறார்கள்.

தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கலை வளர்ச்சியூடாக எமது இளையோர்கள் எமது கலாச்சாரம், பண்பாடு போன்ற பண்புகளை உள்வாங்கி எமது வாழ்வியல் முறைகளை அறிந்து அதற்கேற்ப தமது வாழ்வை அமைத்துக் கொள்ளக்கூடியதாக உள்ளது.

இவை தவிர எமது கிராமியக் கலைகளான கூத்து, வில்லுப்பாட்டு, கும்மி, கோலாட்டம், போன்ற கலைகளையும் தமிழாலயங்கள் ஊடாக கற்றுக்கொள்கின்றார்கள்.

தமிழாலயங்களில் கற்கின்ற கலைகளை ஆண்டுவிழாக்கள், மற்றும் தாயகம் சார்ந்த நிகழ்வுகளில் நிகழ்த்திக்காட்டி எமது தமிழ்க்கலைகளின் பெருமைகளை வெளிக்கொண்டு வருகிறார்கள்.

இவை தவிர இந் நாட்டில் வாழும் பல்லினங்களுக்கும் எமது கலைகளை நிகழ்த்திக் காட்டி எமது தமிழ்க்கலைகளை வெளிநாட்டினர் கண்டு எமது கலைகளின் திறமைகளை அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. வெளிநாட்டாருடனான கலை நிகழ்வுகளில் எமது கலை நிகழ்வுகளையும் இணைக்கக்கூடியதாகவும், அதனூடாக ஓர் நட்புறவு, சகோதரத்துவம் போன்ற பண்புகள் வளரக்கூடியதாகவும் இருக்கின்றது.

தமிழ்க்கலை கற்கும் மாணவர்களுக்கு அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினுடாக தமிழ்க்கலைத் தேர்வுகள் வருடாவருடம் ஒக்ரோபர்- டிசம்பர் மாதத்துள் நடைபெறுகின்றன. இத் தேர்வு தரம் ஒன்று தொடக்கம் ஆற்றுகைத் தரம் (தரம் ஏழு) வரை நடைபெறுகின்றது. இத் தேர்வுக்கான நடுவர்கள் தாயகத்திலிருந்தும், புலம்பொயர்ந்து நாம் வாழும் நாடுகளிலிருந்தும் அழைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறுகின்றன. ஆற்றுகைத்தரத்தில் சித்தியடையும் மாணவர்கள் தமிழாலயங்களில் பயிற்சி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்.

யேர்மனியில் நடைபெறுகின்ற நடன,இசைப் போட்டி நிகழ்வுகளில் தமிழாலயங்களின் தமிழ்க்கலை வகுப்பு மாணவர்கள் பங்குபற்றி வெற்றியீட்டி வருவது குறிப்பிடத் தக்கதாகும். ஆவணப்படங்களை இங்கே அழுத்திப்பார்க்கலாம்.
 
Free business joomla templates