Wählen Sie Ihre Sprache aus / உங்கள் மொழியை தெரிவுசெய்யுங்கள்:

தமிழாலயங்களின் மாணவர்களுக்கான பாடநூல்களைத் தயாரித்தல், ஆசிரியர்களுக்கான கற்பித்தற்பட்டறைகளை நடாத்துதல், மாணவர்களுக்கான தேர்வுகளை நடாத்துதல் போன்ற முக்கிய செயற்பாடுகளுக்குப் பொறுப்பாகக் கல்விப்பிரிவு இயங்கிவருகின்றது.

1990 தொடக்கம் 2000 ஆம் ஆண்டுவரையிலான காலப்பகுதியில் தமிழீழத்திலிருந்து தருவிக்கப்பட்ட தமிழ், சுற்றாடல், சமூகக்கல்வி ஆகிய பாடநூல்களின் உதவியுடனேயே தமிழாலயங்களின் கற்பித்தல்கள் நடைபெற்றன. யேர்மனியில் பிறந்த தமிழ்ச்சிறார்களுக்கு இந்த நாட்டின் கல்வி முறையை ஒத்ததான பாடநூல்களைத் தயாரிக்கவேண்டிய தேவையினால் 2000 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் சிறார்கள்வாழும் 12 க்கு மேற்பட்ட நாடுகளுக்கும் பொருந்தும்வகையில் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளின் பல்வேறுபட்ட தமிழ்க்கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைப்பதற்கான நிறுவனமாக ITEC என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதனூடாகத் தமிழ்மொழிக்கான பாடநூல்கள் தயாரிக்கப்பட்டது. அச் செயற்பாடுகள் 2005 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எமது தமிழாலயங்களின் சிறார்களுக்கான தமிழ்ப்பாடநூல்களையும், அறிமுறைப் பொதுத்தேர்வையும்; கல்வி ஒருங்கிணைப்பு நிறுவனமான தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. தமிழாலயங்களில் சுற்றாடல்/சமூகக்கல்வி, சமயநெறி போன்ற பாடங்களும் கற்பிக்கப்படுகின்றது. அவற்றுக்கான பாடநூல்களை கல்விப்பிரிவினரே யேர்மனியக் கல்வி முறைக்கு ஒத்தவாறு உருவாக்கியுள்ளனர். அத்துடன் அப்பாடங்களுக்கான தேர்வையும் தமிழ்மொழிக்கான செய்முறைத்தேர்வையும் அவர்களே நடாத்திவருகின்றார்கள்.

தமிழ்மொழிக்கான தேர்வுகள் இரு காலப்பகுதியில் நடைபெறுகின்றன. டிசெம்பர் மாதத்தில் அரையாண்டுத்தேர்வும் யூன்மாதத்தில் வகுப்பேற்றும் பொதுத் தேர்வும் ஒரே நாளில் பல நாடுகளில் சமநேரத்தில் நடைபெறுகின்றது. இருப்பினும் தமிழ்மொழிக்கான செய்முறைக்கு 30 வீதம் தமிழாலயங்களிலும் அறிமுறைக்கான 70 வீதம் வினாத்தாள்கள் மூலமாகவும் இரு முறைகளில் நடாத்தப்படுகின்றன. பொதுத் தேர்வில் சித்தியடையும் மாணவர்களுக்கு சர்வதேசத் தரத்திலான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வகுப்பேற்றம் செய்யப்படுகின்றது.

தாயகத்தில் ஆசிரியர்களாகப் பணியாற்றியவர்கள் ஆரம்பகாலத்தில் கற்பித்தலை முன்னெடுத்த போதிலும் கடந்த 18 ஆண்டுகளின் முயற்சியால் யேர்மனியில் பிறந்து தமிழாலயங்களில் தமிழ் பயின்ற 200 க்கு மேற்பட்ட இளைய ஆசிரியர்கள் கற்பித்தற்பணியில் இணைந்துள்ளார்கள். ஆசிரியர்களின் கற்பித்தலை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் செயலமர்வுகளைக் கல்விப்பிரிவினர் நடாத்தி வருகின்றனர்.
Free business joomla templates