TBVWebLogo

தொடர்ச்சியைத் தேடுவதில் தொன்மையின் வெற்றி தமிழாலயங்களின் கலைத்திறன் 2022 – தென்மேற்கு மாநிலம்

தமிழ்க் கல்விக் கழகத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வருகின்ற கலைத்திறன் போட்டியில் தென்மேற்கு மாநிலத்துக்கான கலைத்திறன் போட்டியானது 27.02.2022 ஞாயிற்றுக்கிழமை புறுக்சால் நகரில் நடைபெற்றது.
காலை 8:45 மணியளவில் மங்கல விளக்கேற்றலுடன் அகவணக்கம், தமிழாலயகீதம் இசைக்கப்பெற்று, கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்களின் உரையுடன், கலைத்திறன் அறிக்கை வாசிக்கப்பட்டு நிகழ்வுகள் தொடர்ந்தன.
மேற்பிரிவு, மத்தியபிரிவு ஆகியவற்றிற்கான வாய்ப்பாட்டுப் போட்டிகள் முதற்போட்டி நிகழ்வுகளாக அரங்கை அலங்கரித்தன. போட்டியாளர்களின் திறமைகளை அவையோர் அகமகிழ்ந்து இரசித்துக் களித்ததுடன், போட்டியாளர்கள் அரங்கினில் மதிப்பளித்துச் சிறப்பிக்கப்பட்டனர்.
அடுத்த கலை நிகழ்வாகக் கோலாட்டம் இடம்பெற்றது. கோல்கள் அசைந்த நயம் பார்வையாளர்கள் மனங்களில் குதூகலத்தை ஏற்படுத்தியது.
குழு ஆட்டங்களில் தொடர்ந்து ஓயிலாட்டத்திற்கான போட்டி இடம்பெற்றது. களிபேருவகையில் விழிகள் அகல அவையோரை வியப்பில் ஆழ்த்தியது விந்தைமிகு ஓயிலாட்டம்.
இதனைத் தொடர்ந்து கீழ்ப்பிரிவுக்கான வாய்ப்பாட்டுப் போட்டி இடம்பெற்றது. இசையில் இன்பத்தமிழை அசைவுகளுடன் பாடிய மாணவரின் திறமையில் இலயித்திருந்தன மனங்கள். தௌ;ளுதமிழ்க் கலைகளின் வரிசையில் மனதை அள்ளிக் கொண்டது வில்லுப்பாட்டு. மரபுவழித் தமிழர் கலைவடிவினூடாகச் சிங்களப் பேரினவாதத்தால் எரியூட்டப்பட்ட யாழ்நூலகத்தின் நினைவுகளைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தினர் கலைஞர்கள்.
போட்டி நிகழ்வுகளின் அணிவகுப்பில் தனிமுத்திரை நிலைநாட்டி நின்றது நாடகம். சரித்திரப்புகழ் சங்கிலியமன்னனை தரிசித்ததில் அவையோர் அளவற்ற மகிழ்வெய்தினர். மூன்றாம் தமிழன் சுவையில் மெய்மறந்து மூழ்கினர் அனைவரும்.
உலக அரங்கினில் ஈழத்தமிழர்களின் தலையை நிமிரவைத்த வீரவிடுதலைப் பாடற்போட்டி செவிவழி நுழைந்து சிந்தையைக் கவர்ந்துகொண்டது.
தொடர்ந்து கிராமியக் கலைவடிவங்களான காவடி, கரகம், பொய்க்காற்குதிரை ஒன்றிணைந்த நடனப்போட்டி இடம்பெற்றது. கலை வண்ணத்தில் மாணவர்கள் திறமைகளின் கைவண்ணங்கள் மிளிர்ந்தன.
தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டி 2022 விடுதலைப் பாடல்களுக்கான நடனப்போட்டிகளுடன் இனிதே நிறைவை எட்டியது. போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கான மதிப்பளிப்பையும் சான்றிதழ்களையும் மாநிலச்செயற்பாட்டாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் வழங்கிச் சிறப்பித்தனர். நடுவர்களாகச் செயற்பட்ட கலை ஆசிரியர்கள் சிறப்பான பாராட்டிற்குரியவர்கள். நிறைவாகத் தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் திரு. செல்லையா லோகானந்தம் அவர்களின் உரையுடன் நிகழ்வுகள் சிறப்புடன் நிறைவுபெற்றன.

கலைத்திறன் போட்டி 2022இல் தென்மேற்கு மாநிலத்தில் பங்குபற்றிய தமிழாலயங்களில்
நொய்ஸ்டற் தமிழாலயம் 3ம் இடத்தையும்
பென்ஸ்கைம் தமிழாலயம் 2ம் இடத்தையும்
பாட்ஸ்சுவல்பாக் தமிழாலயம் 1ம் இடத்தையும்
தட்டிக்கொண்டன. வெற்றிபெற்ற தமிழாலயங்கள் தமிழ்க் கல்விக் கழகத்தின் 32ஆவது அகவை நிறைவு விழா அரங்கில் பாராட்டி மதிப்பளிக்கப்படும். போட்டியில் பங்குபற்றிய தமிழாலயங்களுக்கு உற்சாகமூட்டிக் கலந்து சிறப்பித்த பெற்றோர், ஆசிரியர்கள், நிர்வாகச் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்களுக்கு எமது நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

error:
X