TBVWebLogo

கலைகளின் வழியே தமிழினத்தின் மரபுகளைத் தேடும் தமிழாலயங்கள் கலைத்திறன் போட்டி 2022 – தென்மாநிலம்

தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டியின் 2022ஆம் ஆண்டுக்கான போட்டி நடைபெற்று வருகின்றது. தென்மாநிலத்துக்கான போட்டி கடந்த 12.03.2022 ஸ்ருட்காட் நகரிலே 08:30மணிக்கு மங்கல விளக்கேற்றல், அகவணக்கம், தமிழாலயகீதம் என்பவற்றைத் தொடர்ந்து தெரிவுசெய்யப்பட்ட கலை வடிவங்களுக்கான போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.

கோலாட்டப் போட்டியோடு தொடங்கி விடுதலைப்பாடற் போட்டியோடு நிறைவுற்ற கலைத்திறன் போட்டி, தொடங்கியதிலிருந்து நிறைவுவரை மண்டபம் நிறைந்த பார்வையாளர்களோடு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். வில்லிசை, நாடகம் போன்ற தமிழர் கலைவடிவங்கள் ஊடாக எமது வரலாற்றைப் பேசியமை, அதிலும் குறிப்பாக, எரியூட்டப்பட்ட நூலகம் என்ற கருவின் வழியே, ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால், முதலில் அதனது அறிவை அழிக்கவேண்டுமென்ற இன அழிப்பாளர்களின் கோட்பாட்டைச் செயலாக்கியதை வில்லுப் பாட்டினூடாகப் பாடியமை சிறப்பு. தமிழர் கலைகளின் திரளா? அல்லது கலைத்திறன் போட்டியா? என மனம் மகிழும் வண்ணம் போட்டிகள் விறுவிறுப்போடு நடைபெற்றன.

போட்டியிற் பங்கேற்ற ஒவ்வொரு மாணவருக்கும் பங்கேற்புக்கான மதிப்பளிப்பு வழங்கப்பட்டதோடு, நிறைவாக முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய தமிழாலயங்களுக்கான பாராட்டும், வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்பும் நடைபெற்றது. நடுவர்களுக்கான மதிப்பளிப்புடன் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் திரு. செல்லையா லோகானந்தம் அவர்களின் வாழ்த்துரையும் இடம்பெற்றது.

நிறைவாகக் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்களின் நன்றியுரையை அடுத்து, தமிழினத்தின் நம்பிக்கையைப் பறைசாற்றிப் போட்டியரங்கம் விடைபெற்றது.

கலைத்திறன் போட்டி 2022இற்கான தென்மாநிலப் போட்டியிலே, ஸ்ருட்காட் தமிழாலயம் முதலாம் இடத்தையும் லுட்விக்ஸ்பேர்க் தமிழாலயம் இரண்டாம் இடத்தையும் நூர்ன்பேர்க் தமிழாலயம் மூன்றாம் இடத்தையும் தமதாக்கிக் கொண்டன. முதல் மூன்று நிலைகளைப் பெற்ற தமிழாலயங்களுக்கு எமது 32ஆவது அகவை நிறைவு விழா அரங்கில் சிறப்பாக மதிப்பளிக்கப்படவுள்ளது.

போட்டியில் பங்குபற்றி, பாராட்டி மகிழ்ந்த தமிழாலயங்களின் பெற்றோர், ஆசிரியர்கள், நிர்வாகக் குழுவினர் என அனைவரதும் கூட்டு முயற்சியைப் பாராட்டுவதோடு, வாழ்த்துகின்றோம்.

error:
X