TBVWebLogo

வடமத்திய மாநில ஆர்ன்ஸ்பேர்க் அரங்கில் 32ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி

தாயகனின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்ததன் விளைவாக மொழியோடு கலை, பண்பாடு, விளையாட்டு எனப் பன்மைப் பரிமாணங்களினூடாகத் தமிழ்ச் சிறார்களை அணியப்படுத்தி ஆற்றலுடையோராய் வளர்த்தெடுப்பதை நோக்காகக் கொண்டியங்கும் தமிழ்க் கல்விக் கழகம் 32ஆவது அகவை நிறைவு விழாவைச் சிறப்போடு நடாத்திவருகின்றது. இவ்வாண்டும் ஐந்து அரங்குகளில் நடாத்துவதற்குத் திட்டமிட்டவாறு முதலாவது அரங்கம் மத்திய மாநிலத்தின் வெஸ்லிங் நகரில் 09.04.2022 அன்றும் தென்மேற்கு மாநிலத்தின் குன்ஸ்ரெற்ரன் நகரில் 16.04.2022 அன்றும் வடமத்திய மாநிலத்தில் ஆன்ஸ்பேர்க் நகரில் 17.04.2022 அன்றும் நிறைவுற்றுள்ளது.

சிறப்புவிருந்தினர்களாக வருகைதந்த ஆன்ஸ்பேர்க் நகரத் துணைமுதல்வர் திரு பீற்றர் புளும் அவர்களும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மன் கிளைப் பொறுப்பாளர் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள், துணையமைப்புகளான, யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர், யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் ஆகியோரோடு, தமிழ்க் கல்விக் கழகத்தின்; இளைய செயற்பாட்டாளர்களும் இணைந்து மங்கல விளக்கேற்றியதைத் தொடர்ந்து அகவணக்கத்தோடு அரங்க நிகழ்வுகள் தொடங்கின. தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் திரு. செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரைக்கு அமைவாகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் நோக்கமும் இளையோரின் பங்கேற்பும் ஒன்றித்தநிலையில் வடமத்திய மாநில இளையோர்களோடு நடுவச் செயலகத்தின் இளையோர்களும் இணைந்து விழாவைச் சிறப்பாக நடாத்தினர்.

தேர்வு மதிப்பளிப்பு, தமிழ்த்திறன் மதிப்பளிப்பு என ஆற்றல் வளங்களின் அறுவடையாக அமைய, அந்த ஆற்றல்களை அணியமாக்கும் ஆசான்களின் பணியைப் போற்றும் வகையில் 5, 10, 15 ஆண்டுகள் பணிநிறைவிற்கான மதிப்பளிப்பும் 20ஆண்டுகள் பணிநிறைவிற்காக“தமிழ் வாரிதி“ மற்றும் 25 ஆண்டுகள் பணிநிறைவிற்காக “தமிழ் மாணி“ எனப் பட்டமளிப்புமாக அரங்கம் அணிசெய்ய விழா அரங்கு ஒருபுறம் விறுவிறுப்பாகவும் மறுபுறம் உணர்வுகளின் சங்கமமாகவும் அமைந்தன. தமிழாலயத்தின் உறவுகள் ஒன்றிணைந்து வாழ்த்துமடல், மலர்க்கொத்து என வழங்கியதோடு, தமிழாலயத்தோடு இணைந்து பயணித்துத் தமது குழந்தைகளுக்குத் தமிழ்மொழிக் கல்வியைப் ஊட்டியமைக்கான நன்றியைப் பகிரும் வகையிற் பரிசுகளையும் வழங்கியமையை அவதானிக்க முடிந்தது. தமிழ் வளர்த்த புலவர்களைப் பொற்கிளி கொடுத்து மன்னர்கள் பாராட்டியதாக நாம் கற்றதைத் தமிழ்க் கல்விக் கழக அகவை நிறைவுவிழா ஆன்ஸ்பேர்க் அரங்கிலே காட்சியாகக் காணமுடிந்ததெனில் மிகையன்று.

வேற்றுமொழிச் சூழலுள் வாழ்கின்றபோதும் தமது பிள்ளைகளைத் தமிழோடு பயணிக்கச் செய்யும் வகையிற் தமிழ்ப் பெற்றோரின் அயராத முயற்சியோடு, ஆசான்களின் ஒருங்கிணைந்த உழைப்பின் பயனாக ஆண்டு 12 வரை தமிழாலயங்களில் கற்றலை நிறைவுசெய்தோருக்கான மதிப்பளிப்புத் தமிழ்க் கல்விக் கழகத்தின் மற்றொரு பரிமாணமாய்த் துலங்கியது. இந்த மாணவர்களை நோக்கி “தமிழ்த் தேசியத்திற்காகவும் தேசத்திற்காகவும் என்ன செய்யப் போகின்றோம்? என்று தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் தனது உரையிலே வினவியமையையும் அவதானிக்க முடிந்தது.

அகவை நிறைவு விழாவின் முத்தாரமாய் தமிழாலயக் குடும்பம் ஒன்றுகூடி முயற்சியும் பயிற்சியுமாக ஒன்றிணைந்து உழைத்ததன் அறுவடையாகத் தமிழ்த்திறன், தேர்வு, கலைத்திறன் எனத் தமிழாலயங்கள் வெற்றிக்கனிகளைத் தமதாக்கியதன் பயனாகச் சிறப்பு மதிப்பளிப்புகள் வழங்கப்பட்டன.

வடமத்திய மாநில ஆன்ஸ்பேர்க் அரங்கிலே தமிழ்த்திறன் போட்டியிலே நாடுதழுவிய மட்டத்தில் மூன்றாம் நிலையைப்பெற்ற தமிழாலயம் முன்ஸ்ரர் மதிப்பளிப்பைப் பெற்றுக்கொள்ள, கலைத்திறன் போட்டியிலே மாநில மட்டத்தில் முறையே முதல் மூன்று நிலைகளைத் தமிழாலயம் வாறன்டொவ்;, தமிழாலயம் எசன், தமிழாலயம் இறைனே ஆகியனவும் கலைத்திறன் நாடு தழுவிய மட்டத்தில் தமிழாலயம் வாறன்டொவ் மூன்றாம் நிலையைப் பெற்றமைக்கும் எனத் தனித்துவமாக மேடைக்குத் தமிழாலயங்கள் அணி அணியாக வருகைதந்து தங்கள் மகிழ்வுகளைக் கொண்டாடியதோடு மதிப்பேற்பையும் பெற்றுக்கொண்டனர். வெற்றிபெற்ற தமிழாலயங்களுக்குப் பிரிவுசார் பொறுப்பாளர்களின் வாழ்த்துரைகளோடு, தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளரின் வாழ்த்துரையும் இடம்பெற்றது. நிறைவாக விழாவை சிறப்பாக நடாத்திய இளையோருக்கான மதிப்பளிப்போடு, நன்றியுரையைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் என்ற தமிழரின் நம்பிக்கையைத் தொட்டவாறு விழா நிறைவுற்றது.

error:
X