தமிழாலயங்களில் தமிழ்மொழியைக் கற்றுவரும் தமிழ்ப் பிள்ளைகளின் தமிழ் கற்கும் திறனை மதிப்பீடு செய்யும் பொருட்டு ஒவ்வொரு கல்வியாண்டின் அரைப்பகுதியிலும் அரையாண்டுத் தேர்வானது தமிழ்க் கல்விக் கழகத்தால் நடாத்தப்பட்டு வருகின்றது. தனது நிருவாகத்தின் கீழியங்கும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்து இவ்வாண்டுக்கான அரையாண்டுத் தேர்வை 31.01.2026 சனிக்கிழமை சிறப்புடன் நடாத்தியது. தமிழ்க் கல்விக் கழகத்தின் கட்டமைக்கப்பட்ட நிருவாகப் பொறிமுறைகளைப் பயன்படுத்தி, கண்ணியத்துடனும் நேர்மையுடனும் இத்தேர்வு நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இவ்வனைத்துலக அரையாண்டுத்தேர்வு நாடுதழுவிய மட்டத்தில் 100க்கு மேற்பட்ட தேர்வு நிலையங்களில் நடைபெற்று நிறைவெய்தியுள்ளது. ஒவ்வொரு நிலையத்திற்கும் ஒவ்வொரு சிறப்புக் கண்காணிப்பாளர் என்ற அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியப் பெருந்தகைகள் தமிழ்க் கல்விக் கழகத்தின் விதிமுறைகளுக்கேற்ப கடமையுணர்வோடும் தமிழ்மொழியைக் காத்து வளர்க்கும் நல்லெண்ணத்தோடும் இப்பணியில் ஈடுபட்டனர். பெரும்பாலான தமிழாலயங்கள் தனியாகவும் சில தமிழாலயங்கள் இணைந்தும் தேர்வு நிலையங்களை அமைத்திருந்தன.
தமிழ்க் கல்விக் கழகத்தின் தேர்வுப்பிரிவினரால் தேர்வுத்தாள்கள் நேர்த்தியாகப் பொதியாக்கப்பட்டு, தாயமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்வு நாளன்று காலை 08:00 மணி தொடக்கம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் தேர்வு மண்டபத்தை நோக்கி வருகைதரத் தொடங்கினார்கள். 08:30 மணிக்குத் தாயமைப்பின் செயற்பாட்டாளர்கள் தேர்வுத்தாள் பொதியை அந்தந்த தேர்வுநிலையத்தின் சிறப்புக் கண்காணிப்பாளரிடம் கையளித்ததைத் தொடர்ந்து, 09:00 மணிக்குத் தொடக்க நிகழ்வுகளுடன் அனைத்துலக அரையாண்டுத்தேர்வு தொடங்கிவைக்கப்பட்டது. காலை 09:30 மணிக்குத் தேர்வாளர்கள் அனைவரையும் தேர்வு மண்டபத்தில் அமர்த்திச் சரியாக 10:00 மணிக்குத் தேர்வு தொடங்கியது. ஆண்டு 1,2,3 வரை 11:30 மணிக்கும் ஆண்டு 4,5,6 வரை 12:00 மணிக்கும் ஆண்டு 7,8,9 வரை 12:30 மணிக்கும் ஏனைய வகுப்புநிலைகளுக்கு 13:00 மணிக்கும் அரையாண்டுத்தேர்வு நடைபெற்று நிறைவெய்தியது.
கல்வியாண்டின் அரைப்பகுதியில் வகுப்பறைகளில் ஆசான்களிடமிருந்து தாம் பெற்றுக்கொண்டவற்றில் தமது தகுதிநிலைகளையறிந்து யூன் மாதம் நடைபெறவிருக்கும் அனைத்துலகப் பொதுத்தேர்விற்குத் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள இந்த அரையாண்டுத்தேர்வு மாணவர்களுக்கு உதவியாக அமைகின்றது.