கலைத்திறனோடு கலைக்களமாடி மகிழும் வளரிளம் தமிழர்கள் – ஸ்ருற்காட்

தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவால் வளரிளம் தமிழர்களிடமுள்ள பல்வகை இன்கலைகளின் வினைத்திறனை வெளிக்கொணரும் நோக்கோடு நடாத்தப்படும் கலைத்திறன் போட்டியின் தென்மாநில அரங்காற்றுகை 28.02.2026 சனிக்கிழமை ஸ்ருற்காட் நகரில் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் ‘செம்மையாளன்’ திரு. செல்லையா லோகானந்தம் அவர்கள் பொதுச்சுடர் ஏற்றிடத் தொடங்கியது. ஸ்ருற்காட் சிறீசித்தி விநாயகர் கோவிலின் குருவானவர்களான சிவசிறீ உமாமகேஸ்வரக் குருக்கள், சிவசிறீ உமாகாந்தக் குருக்கள், யேர்மன் த.ஒ.குழுவின் தென்மாநிலப் பொறுப்பாளர் திரு. கனககையா சிறிகாந்தன், த.ஒ.குழுவின் பொட்ஸ்கைம், முய்லாகர் கோட்டம் மற்றும் ஸ்ருற்காட் சிறீசித்தி விநாயகர் கோவில் பொறுப்பாளருமான திரு. சின்னையா மகேஸ்வரன், த.ஒ.குழுவின் முன்சன் கோட்டப் பொறுப்பாளர் திரு. பரமு ஆனந்தசிங்கம், ஸ்ருற்காட் கோட்டப் பொறுப்பாளர் திரு. மகாலிங்கம் கோணேஸ்வரன், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் தென்மாநிலப் பொறுப்பாளர் திருமதி ஜீவராணி செல்வராசா, மூத்த நடன ஆசிரியரான திருமதி துஸ்யந்தினி ஜெகதீஸ்வரன், இசை ஆசிரியரான செல்வன் சிவபாலன் கஜன் மற்றும் தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவின் தென்மாநிலச் செயற்பாட்டாளர் திருமதி பகீரதி ஆனந்தசிங்கம் ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றினர். அகவணக்கம், தமிழாலயப்பண் மற்றும் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் ‘தமிழ் மாணி’ திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்களது வரவேற்புரையைத் தொடர்ந்து போட்டிகள் தொடங்கின. இவ்வாண்டுக்கான கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், காவடி, கரகம், பொய்க்காற்குதிரை, பரதநாட்டியம், விடுதலை நடனம், கூத்து மற்றும் விடுதலைப் பாடல், வாய்ப்பாட்டு போன்றன போட்டிகளாக நடைபெற்றன.
தமிழர் கலைகளுள் தேர்வு செய்யப்பட்ட பல்வேறு கிராமிய மற்றும் பரதக் கலைகளுக்கான போட்டிகள் தொடங்கியதிலிருந்து நிறைவுவரை மண்டபம் நிறைந்த மக்கள் திரளோடு நடைபெற்றன. புத்தாக்கமாக உருப்படிகளின் உருவாக்கத்தில் அரங்கை அணிசெய்த வாள்நடனம் மற்றொரு சிறப்பாக்கமாகப் பார்வையாளர்களின் மனதைத் தொட மற்றொரு நடன ஆக்கமான மயிலாட்டம் விழிகளை நிறைத்தது. குழுநிலை மற்றும் தனிநிலை என இரு அரங்குகளில் அணியமான போட்டிகளில் பங்குபற்றியவர்களுக்கு அவர்களது அரங்காற்றுகைத் தற்துணிவைப் பாராட்டும் வகையில் மேன்மையுடன் மதிப்பளித்தனர்.
நிறைவாக முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்பு இடம்பெற்றதோடு, புள்ளிகளின் அடிப்படையில் தென்மாநிலத்தில் முறையே முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய தமிழாலயம் ஸ்ருற்காட், தமிழாலயம் முன்சன் மற்றும் தமிழாலயம் நூர்ன்பேர்க் ஆகிய தமிழாலயங்கள் மதிப்பளிப்பைப் பெற்றன. யேர்மனியின் கேர்பன் முதல் பென்ஸ்கைம் வரையான பல்வேறு நகரங்களில் இருந்து இணைந்த இருபத்தொன்றுக்கு மேற்பட்ட நடுவர் குழாமோடு 08:40 மணிக்குத் தொடங்கிய கலைத்திறன்போட்டி வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்புகளோடு, 20:30 மணிக்குத் தமிழினத்தின் நம்பிக்கையை வலியுறுத்தியவாறு நிறைவுற்றது. தொடர்ந்து தென்மேற்கு மாநிலத் தமிழாலயங்களுக்கான போட்டி 21.03.2026 வைற்றர்ஸ்ரட் நகரில் நடைபெறவுள்ளது.

error:
X