தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவால் வளரிளம் தமிழர்களிடமுள்ள பல்வகை இன்கலைகளின் வினைத்திறனை வெளிக்கொணரும் நோக்கோடு நடாத்தப்படும் கலைத்திறன் போட்டியின் தென்மேற்கு மாநிலத்தின் அரங்காற்றுகை 21.03.2026 சனிக்கிழமை வைற்றஸ்ரட் நகரில் யேர்மனியத் தமிழ்ப் பெண்கள் அமைப்புப் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன் அவர்கள் பொதுச்சுடர் ஏற்றிடத் தொடங்கியது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் டாம்ஸ்ரட் மற்றும் குறோஸ்கிறவ் கோட்டப் பொறுப்பாளர் வினாசித்தம்பி சிறிவிக்கினேஸ்வரமூர்த்தி, தமிழ்க் கல்விக் கழகத்தின் பரப்புரைப் பிரிவுப் பொறுப்பாளர் திரு. தர்மலிங்கம் தீபன், நிதிப்பிரிவுத் துணைப் பொறுப்பாளர் திரு. செல்வேந்திரன் பிரவீன், கலைப்பிரிவின் தென்மேற்கு மாநிலச் செயற்பாட்டாளர் “தமிழ் மாணி” திருமதி இராசாராணி சிறீவிக்னேஸ்வரமூர்த்தி, சுல்ஸ்பாக், பாட்சுவல்பாக் மற்றும் பிராங்பேர்ட் தமிழாலயங்களின் நிருவாகிகள் முறையே “தமிழ் மாணி” திரு.குமாரவேலு தேவகுமார், திருமதி வசந்தரஜனி லிங்கதாசன், திரு. வைரமுத்து ஜெகராசா, லண்டவ் தமிழாலயத்தின் முன்னாள் நிருவாகி ‘தமிழ் மாணி ‘திரு. கந்தசாமி குலேந்திரராஜா, நடுவர் குழாமைச் சேர்ந்த நடன ஆசிரியர்களான திருமதி கயல்விழி சேரன், திருமதி துர்க்கா ராமேஸ் ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றினர். அகவணக்கம், தமிழாலயப்பண் மற்றும் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ் மாணி” திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்களது வரவேற்புரையைத் தொடர்ந்து போட்டிகள் தொடங்கின. இவ்வாண்டுக்கான கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், காவடி, கரகம், பொய்க்காற்குதிரை, பரதநாட்டியம், விடுதலை நடனம், கூத்து மற்றும் விடுதலைப் பாடல், வாய்ப்பாட்டு போன்றன போட்டிகளாக நடைபெற்றன.
தமிழர் கலைகளுள் தேர்வு செய்யப்பட்ட பல்வேறு கிராமிய மற்றும் பரதக் கலைகளுக்கான போட்டிகள் தொடங்கியதிலிருந்து நிறைவுவரை மண்டபம் நிறைந்த மக்கள் திரளோடு நடைபெற்றன. குழுநிலை மற்றும் தனிநிலை என இருநிலைகளிலும் அணியமான போட்டிகளில் பங்குபற்றியவர்களுக்கு அவர்களது அரங்காற்றுகைத் தற்துணிவைப் பாராட்டிப் போற்றும் வகையில் மேன்மையுடன் மதிப்பளித்தனர்.
நிறைவாக முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்பு இடம்பெற்றதோடு, புள்ளிகளின் அடிப்படையில் தென்மேற்கு மாநிலத்தில் முறையே முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய தமிழாலயம் பிராங்பேர்ட், தமிழாலயம் பாட்சுவல்பாக் மற்றும் தமிழாலயம் டாம்ஸ்ரட் றோஸ்டோர்வ் ஆகிய தமிழாலயங்கள் மதிப்பளிப்பைப் பெற்றன. யேர்மனியின் வடக்குத் தெற்காகப் பல்வேறு நகரங்களில் இருந்து இணைந்த 17க்கு மேற்பட்ட நடுவர் குழாமோடு 08:30 மணிக்குத் தொடங்கிய கலைத்திறன்போட்டி வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்புகளோடு, 20:30 மணிக்குத் தமிழினத்தின் நம்பிக்கையை வலியுறுத்தியவாறு நிறைவுற்றது.