36ஆவது அகவை நிறைவோடு வடமாநிலத் தமிழாலயங்கள் – கனோவர்

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகப் பொறிமுறைக்கமைய 36ஆவது அகவை நிறைவு விழா ஐந்து மாநிலங்களில் அணியமாகித் திட்டமிட்டவாறு நடைபெற்று வருகின்றன. வடமாநிலத் தமிழாலயங்களுக்கான அரங்கம் கனோவர் நகரிலே அணிசெய்ய 18.04.2026 சனிக்;கிழமை அகவை நிறைவுவிழா நடைபெற்றது. கதிரவனின் பொற்கதிர்களின் ஒளிக்கீற்று அரங்க முற்றத்தை ஊடுருவி உற்சாகத்தைப் பரவச் செய்த இளம்காலைப் பொழுதினிலே பொதுச்சுடர் ஏற்றலோடு தொடங்கிய விழாவில், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மன் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் பொதுச்சுடர் ஏற்றினார். சிறப்பு விருந்தினர்கள், வெற்றியாளர்கள் மற்றும் மதிப்பளிப்பைப் பெறவந்த அறப்பணியாளர்கள் ஆகியோர் தமிழினத்தின் பண்பாடு தழுவிப் பன்னீர் தெளித்துச் சந்தனப் பொட்டிட்டு வாழ்த்திசைப்பாவுடன் வரவேற்று அரங்கினுள் அழைத்துவரப்பட்டனர். வரவேற்பினைத் தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மன் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் இணை இணைப்பாளர் திரு. சிவலிங்கம் கிருஸ்ணகுமார், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வடமாநிலப் பொறுப்பாளர்களான திரு. இளையதம்பி துரைஐயா, திரு.கணேசமூர்த்தி யோகேந்திரன், திரு. நடராசா திருச்செல்வம் மற்றும் வடமாநிலச் செயற்பாட்டாளர்களான ‘தமிழ் மாணி’ திருமதி சுபத்திரா யோகேந்திரன், திருமதி அன்னலட்சுமி இராமலிங்கம், ‘தமிழ் மாணி’ திருமதி விமலகாந்தி உலகநாதன் மற்றும் திரு. கந்தசாமி செந்தில்குமரன் ஆகியோர் மங்கல விளக்கேற்றினர். அகவணக்கம், தமிழாலயப்பண் என்பவற்றை அடுத்துத் தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் ‘செம்மையாளன்’ திரு. செல்லையா லோகானந்தம் அவர்கள் வரவேற்புரையாற்றினார். வரவேற்புரையை யேர்மன் மொழியில் திருமதி அபர்ணா பானுசன் வழங்கினார்.
5,10,15 ஆண்டுகள் அறப்பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் நிருவாகிகள் மதிப்பளிக்கப்பட்டதோடு, 20, 25 ஆண்டுகள் அறப்பணியாற்றியவர்களுக்கு முறையே ‘தமிழ் வாரிதி’ மற்றும் ‘தமிழ் மாணி’ என்ற சிறப்புப் பட்டமும் வழங்கப்பட்டது. அதேவேளை 30 ஆண்டுகள் அறப்பணியாற்றியோருக்கு மூன்று உடுக்கள் பதிக்கப்பட்ட சிறப்புச் சின்னம் அணியப்பட்டு மதிப்பளிக்கப்பட்டதுடன், 35 ஆண்டுகள் அறப்பணியாற்றிய பணியாளரையும் மதிப்பளித்தனர். தமிழ்த்திறன் போட்டியின் வெற்றியாளர்கள், அனைத்துலகத் தமிழ்மொழிப்பொதுத்தேர்வின் வெற்றியாளர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வில் யேர்மனி தழுவிய மட்டத்தில் இரண்டாம் நிலையைப் பெற்ற கனோவர் தமிழாலயம் சிறந்த தமிழாலயத்துக்கான மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டது.
மதிப்பளிப்புகள், வாழ்த்துரைகள், உரை, கவிதை, விடுதலைப் பாடல்கள் மற்றும் விடுதலை நடனங்களோடு விரிந்த அரங்கில் 14 ஆண்டுகள் தமிழாலயங்களோடு இணைந்து பயணித்து 12ஆம் ஆண்டுத் தேர்வில் சித்தியடைந்து விடைபெறும் மாணவர்கள் பாரதிதாசனின் “தமிழுக்கும் அமுதென்று பேர். அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற அறைகூவலோடு தமக்கான சிறப்பு மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டனர். 10:00 மணிக்குப் பொதுச்சுடரேற்றலோடு தொடங்கிய அகவை நிறைவு விழா 19:30 மணிக்குத் தமிழர் தாயகத்தின் விடியல் மீதான நம்பிக்கையை அகமேந்தி ஒன்றித்த உறுதியேற்புடன் சிறப்பாக நிறைவுற்றது.

error:
X