கடந்த 36 ஆண்டுகள் இடையறாது நிலை தளும்பாது தமிழ்ப் பிள்ளைகளுக்;குச் செம்மொழியான தமிழ்மொழியைக் கற்பித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம், யேர்மனியில் வாழும் தமிழர்கள் மத்தியில் முதன்மை ஒருங்கிணைப்புக் கல்விக் கட்டமைப்பாகத் திகழ்கின்றது. நாடு முழுவதிலும் தமிழர்கள் செறிந்து வாழும் 100க்கு மேற்பட்ட நகரங்களில் தமிழாலயம் என்ற பள்ளிகளை நடாத்தி வருகின்றது. காலத்தின் தேவைக்கேற்றவாறு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தேவைகளை மையமாகக் கொண்டு செயற்பாடுகளைச் செம்மைப்படுத்தி வருகின்றது.
புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் 15க்கு மேற்பட்ட நாடுகளிலுள்ள கல்விக் கட்டமைப்புகளை ஒருங்கிணைத்து வரும் அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை 06.06.2026 சனிக்கிழமை பல்லாயிரம் மாணவர்களிடையே அனைத்துலகப் பொதுத்தேர்வைச் சிறப்பாக நடாத்துகின்றது. இத்தேர்வில் யேர்மனியத் தமிழாலயங்களிலிருந்து 4000க்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். இந்த 4000க்கு மேற்பட்ட மாணவர்களுக்கான சிறப்புத் தேர்வு நிலையங்கள் 70க்கு மேற்பட்ட நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 12வரையிலான மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். தேர்வு நிலையங்களில்
மேற்பார்வையாளர்களாக 400க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் சிறப்பாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தமிழ்க் கல்விக் கழகம் அதன் இருப்பையும் எதிர்கால வீழ்ச்சியற்ற வளர்ச்சியையும் அவ்வப்போதைய செயற்பாடுகளில் உறுதிப்படுத்தி வந்துள்ளது.
அந்தவரிசையில் நடைபெறும் அனைத்துலகப் பொதுத்தேர்வின் சிறப்புப் பொறிமுறையாக ஒவ்வொரு தேர்வு நிலையத்திலும் நடைபெறும் தேர்வை ஒருங்கிணைப்பவர் முதன்மை மேற்பார்வையாளரே. அப்பொறுப்புமிக்க பொறுப்பை யேர்மனியில் பிறந்து தமிழாலயங்களில் பயின்று அங்கேயே பயிற்றுவிக்கும் 70க்கு மேற்பட்ட இளையர்கள் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் இன்று நடைபெறும் தேர்வை ஒருங்கிணைத்து நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்பொறுப்;பு வாய்ந்த பணி அவர்களின் வயதையும் பட்டறிவையும் முட்டமுடியாத நிலையாக இருந்தாலும், அவர்களுக்குப் பயிற்றுவித்த பல மூத்த ஆசிரியர்கள் தேர்வு நிலையங்களில் மேற்பார்வையாளர்களாகப் பின்னின்று அணிவகுத்துப் பணியாற்றுவதும் இளையர்களின் பொறுப்புக்கு வளம் சேர்த்துப் பலம் தருவதும் தமிழ்க் கல்விக் கழகத்தின் பரிணாமத்தின் அடுத்த படியாகும். ‘பண்பட்ட நிலத்துப் பயிர் செழித்தோங்கும்’ என்பது பொய்யாமொழி. யேர்மனியில் தமிழ்மொழியும் தமிழர் பண்பாடும் தமிழாலயங்களினூடாக வேர்களாக இறங்கி, விளைந்து, செழித்து, விழுதுகளாகியுள்ளன. நடைபெறும் இவ் அனைத்துலகப் பொதுத்தேர்வின் விடைத்தாள்கள் இன்று மாலைக்குள் ஸ்ருற்காட் நகரில் அமைந்துள்ள நடுவச் செயலகத்தில் ஒன்றுதிரட்டப்பட்டு, அவையனைத்தும் நாளை மறுநாள் அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையிடம் கையளிக்கப்படும். அங்கு விடைத்தாள்கள் திருத்தும் பணியைப் பன்னாட்டு ஆசிரியர் குழாம் முன்னெடுக்கும்.
14 மற்றும் 20 ஆகிய நாள்களில் அனைத்துலகப் பொதுத்தேர்வின் இரண்டாம் பகுதியான புலன்மொழி வளத்தேர்வு தமிழாலய மட்டத்தில் சிறப்பு நடுவர்களால் நடாத்தப்படும். அவ்விருவகையான தேர்வுகளின் புள்ளிகளும் ஒன்றிணைக்கப்பட்டு, மாணவர்களுக்கான பெறுபேறுகள் கணிக்கப்படும். அதனடிப்படையில் ஓகஸ்ட் மாதம் தொடங்கும் புதிய கல்வியாண்டில் மாணவர்கள் வகுப்பேற்றம் செய்யப்படுவார்கள்.
நிறைவுபெறும் இக்கல்வியாண்டில் கல்விச் செயற்பாடுகள் சிறப்பாக நடைபெற தன்னலமற்றுப் பணியாற்றும் ஆசிரியர்கள், நிருவாகத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்கள் அனைவருக்கும் நடுவச் செயலகத்திலிருந்து கல்வி மற்றும் தேர்வுப் பிரிவுகளின் பொறுப்பாளர்கள் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றார்கள். சிறப்புமிக்க இந்நாளில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்குத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் தனது அன்பையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கின்றார்.