31ஆவது அகவை நிறைவில் எழுச்சியுடன் தமிழாலயம் சுவனிங்கன்

28 யூன் 2026 ஆம் நாளன்று 09:00 மணிக்குத் தாயகம், மொழி, கலை மற்றும் பண்பாடு என்பவற்றைக் காத்திடும் நோக்கோடு களமாடி வித்தானோரை அகமேந்திக் கிறித்துவ சனநாயக ஒன்றியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் துணைத்தலைவி திருமதி கத்தரினா கீர்த் அவர்கள் பொதுச்சுடரேற்றி வைக்க, சுவனிங்கன் தமிழாலயத்தின் 31ஆவது அகவை நிறைவு விழாத் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களைத் தமிழினத்தின் பண்பாடு தழுவி வரவேற்றனர். அகவை நிறைவுவிழா அரங்கு சுவனிங்கன் நகரின் தேசியச் செயற்பாட்டாளரும், தமிழாலயத்தின் முன்னாள் நிருவாகியுமான காலஞ்சென்ற மகாதேவா சிவநேசன் அவர்களை நினைவேந்தி அவரது திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரேற்றி மலர்மாலை அணிந்ததோடு, விழாவோடு இணைந்திருந்த தமிழ் உறவுகளின் மலர் மற்றும் சுடர் வணக்கமும் சிறப்புடன் நடைபெற்றது.

தொடர்ந்து அகவை நிறைவுவிழாவோடு அரங்கு அணியமாகக் கிறித்துவ சனநாயகக் ஒன்றியக் கட்சியின் (CDU) நாடாளுமன்ற குழுவின் துணைத்தலைவி திருமதி கத்தரினா கீர்த், யேர்மனிய சமூக சனநாயகக் கட்சியின் (SPD) வில்லிங்கன் – சுவனிங்கன் நகராட்சிமன்ற உறுப்பினர் திருமதி ஆயிசா ஆடே, யேர்மனிய சமூக சனநாயகக் கட்சியின் (SPD) கட்சியின் வில்லிங்கன் – சுவனிங்கன் நகரக்கிளை உறுப்பினர் திரு. பெஞ்சமின் டெபுஸ், குமுகாயப் பணியாளர் திரு. அல்பிரெக்ற் பென்சிங், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் ‘செம்மையாளன்’ திரு. செல்லையா லோகானந்தம், சிங்கன் சித்தி விநாயகர் ஆலய குரு சிவஸ்ரீ கோபிதாஸ் சுப்பிரமணியம், சுவனிங்கன் தமிழாலய நிருவாகி செல்வன் பவளநாதன் பிரகாஸ், சுவனிங்கன் தமிழாலயத்தின் முன்னாள் நிருவாகி காலஞ்சென்ற சிவநேசன் அவர்களின் துணைவி திருமதி சியாமளா சிவநேசன் ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றி வைத்தனர். அகவணக்கம், தமிழாலயப்பண் என்பனவற்றைத் தொடர்ந்து சுவனிங்கன் தமிழாலய நிருவாகி செல்வன் பவளநாதன் பிரகாஸ் அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் ‘செம்மையாளன்’ திரு. செல்லையா லோகானந்தம் அவர்கள் வாழ்த்தி வழங்கி வைத்தார். தமிழாலய மாணவர்களின் கலை நிகழ்வுகளோடு, ரூட்லிங்கன், றாடொல்வ்செல், றாவன்ஸ்பூர்க், பிறைபூர்க் ஆகிய அயல் தமிழாலய மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அணிசெய்து அரங்கைச் சிறப்பித்தன. அனைத்துலகப் பொதுத்தேர்வில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றவர்களுக்கும் தமிழ்த்திறன் போட்டியில் மாநிலம் மற்றும் நாடுதழுவிய மட்டத்தில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் மதிப்பளிப்புகள் இடம்பெற்றன. தொடர்ந்து 31ஆவது அகவை நிறைவைச் சிறப்பிக்கும் வகையில் சிறப்புமலர் வெளியிடப்பட்டது. பெற்றோர்கள் ஒளியேந்தச் சிறப்புமலர் வெளியீட்டுப் பாடல் ஒலிக்க, அரங்கிற்கு எடுத்து வந்த சிறப்புமலரைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பரப்புரைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. தர்மலிங்கம் தீபன் வெளியிட்டுவைத்து, வெளியீட்டுரையாற்றினார். முதற்பிரதியை திரு திருமதி கந்தசாமி  கேதீஸ்வரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
தமிழாலயத்தில் 12ஆம் ஆண்டுவரை கற்றலை நிறைவுசெய்த மாணவர்களுக்கான மதிப்பளிப்பைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் வழங்கிச் சிறப்புரையாற்றினார். கலைத்திறனாளர்களுக்கான மதிப்பளிப்பைக் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் ‘தமிழ் மாணி’ திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி வழங்கியதோடு, அவரது வாழ்த்துரையும் இடம்பெற்றது.
தமிழ்க் கல்விக் கழகத்தினர், அயல் தமிழாலயங்களின் நிருவாகியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நலன்விரும்பியர் ஆகியோரென மண்டபம் நிறைந்த மக்கள் திரளோடு, சுவனிங்கன் நகரிலே இன்னும் பல்லாண்டு தமிழ் தடம் தொடரும் என்பதனை எடுத்துரைத்த 31ஆவது அகவைப் பெருவிழா தமிழரின் தாகத்தைச் சுமந்தவாறு எமது இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கையோடு 19:00 மணிக்கு நிறைவுற்றது.

error:
X