மாந்த வாழ்வில் கல்வியின் அகத்தியத்தையும் அறிவின் பெருமையையும் உணர்த்தும் வாணிவிழாவைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழியங்கிவரும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் பெரும்பாலான தமிழாலயங்களிலும் தமிழ்க் கல்விக் கழகத்தின் நடுவச் செயலகத்திலும் கொண்டாடப்பட்டது. கல்விக் கடவுளான கலைமகளைப் போற்றிக் கொண்டாடப்படும் வாணிவிழாவின் சிறப்பு வழிபாட்டைத் தமிழாலயங்கள் தமது வளவல்லமைக்கேற்ப ஒழுங்கமைத்திருந்தனர். நவராத்திரி விழாவின் பத்தாம் நாளன்று தமிழாலயங்கள் தமது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து, கலைவாணிக்கு முக்கனிகளுடன் பொங்கல், அவல், சுண்டல், வடை, மோதகம் போன்றவற்றைப் படைத்து வழிபட்டனர்.
குழந்தைகளின் கல்விப் பயணத்தை முதன்முதலில் தொடக்கி வைக்கும் சிறப்பு நிகழ்வான ஏடுதொடக்குதல் நிகழ்வும் தமிழாலயங்களில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழாலயங்களின் மூத்த ஆசிரியர்கள் தமது மடியில் குழந்தைகளை இருத்தி, புதுநெல்மணியில் விரல் பிடித்து, அகரம் எழுதி, குழந்தைகளின் கல்வி கற்றலைத் தொடக்கி வைத்தனர். கலை ஆசிரியர்கள் கலை கற்க விரும்பும் மாணவர்களுக்குக் கலைகளைக் கற்கத் தொடக்கி வைத்தனர். அதன்பின்னர் நவராத்திரி விழாவின் சிறப்புப் பற்றிய பேச்சு, கவிதை, ஆடல், பாடல் என கலைநிகழ்வுகளும் நடைபெற்றன. நிறைவாகத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு சிறக்கும் வகையில் கலைமகளுக்குப் படைத்தவற்றைக் கூடியிருந்து, பகிர்ந்துண்டு மகிழ்வடைந்தனர் தமிழாலயக் குழுமத்தினர். இவ்விழா ஓர் இறைநெறி சார்ந்த விழாவாக இருந்தபோதிலும், கல்வி என்ற உன்னத இலக்கோடு பணியாற்றிவரும் தமிழ்க் கல்விக் கழகமும் அதன் தமிழாலயங்களும் இவ்விழாவைச் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றனர். ஆயகலைகள் அறுபத்து நான்கிற்கும் தலைவியாக விளங்கும் கலைமகளின் வளம்பெற்று, மாணவர்களின் கல்வி வளம் சிறக்கவே இவ்வாணிவிழாவை ஆண்டுதோறும் சிறப்புடன் கொண்டாடி வருகின்றனர்.