Wählen Sie Ihre Sprache aus / உங்கள் மொழியை தெரிவுசெய்யுங்கள்:

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி, அதன் நிர்வாகக் கட்டமைப்பிலும் அதை ஒருங்கிணைத்து வழிநடத்துவரின் கைகளிலேயும் பெரும்பங்கு தங்கியுள்ளதென்பதை நன்கு அறிந்த நிலையில் 2000 ஆம் ஆண்டில் தமிழ்க் கல்விக் கழகத்திற்கென ஒரு தனித்துவமான முதலாவது நடுவச் செயலகம் ஸ்ருற்காட் நகரில் நிறுவப்பட்டதுடன் கல்விக் கழகத்தின் அனைத்துச் செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்துச் செயற்படுத்துவதற்கென ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டார். நடுவச் செயலகம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டிலேயே 130 தமிழாலயங்களையும் ஒருங்கிணைத்துச் சிறப்பாக நடாத்துவதற்கான நிர்வாகக் கட்டமைப்புக்கள் நடுவச் செயலகத்தினால் உருவாக்கப்பட்டன.

• நிர்வாகம், நிதி, தேர்வு, தமிழ்த்திறன், கலை, விளையாட்டு, தாயகஅபிவிருத்தி, பன்னாட்டார் உறவுப்பிரிவு
ஆகிய செயற்பாடுகளுக்கெனத் தனியான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதுடன் அவர்களின் பொறுப்பின்கீழ் அச்செயற்பாடுகள் தனித்துவமான வளர்ச்சிநோக்கிய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன.

800 க்கு மேற்பட்ட சதுரகிலோமீற்றர் தூரத்துக்குள் பரந்துள்ள 130 தமிழாலயங்களையும் இலகுவான முறையில் ஒருங்கிணைத்து நடாத்தும் நோக்கில். 130 தமிழாலயங்களும் 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக ஒருங்கிணைப்புச் செயற்பாட்டாளர்கள் மாநிலரீதியாக நியமிக்கப்பட்டனர்.

தமிழ்த்திறன் மாநிலப் போட்டி ஒரே நாளில் யேர்மனி முழுவதிலும் 6 நிலையங்களில் 200 க்கு மேற்பட்ட நடுவர்களை உள்வாங்கி நடாத்தும் நிலைக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்க் கல்விக் கழகத்தின் ஆண்டுவிழாவில் பெருந்தொகையான மாணவர்களும் பெற்றோரும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் 5 இடங்களில் கொண்டாடும் அளவுக்கு நிர்வாகத்திட்டமிடல்களும் கலைநிகழ்வுகளுக்கான ஒருங்கிணைப்புக்களும் வளர்ச்சி பெற்றுள்ளன.

தமிழாலயங்களில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் பல கற்பித்தல் செயலமர்வுகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. இச் செயற்பாடுகளுக்கான ஆசிரியப்பயிற்றுனர்கள் தேவைக்கேற்பத் தாயகத்திலிருந்து தருவிக்கப்படுகின்றனர். தமிழாலயங்களில் 5 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக ஆசிரியர்களாகப் பணியாற்றுவோருக்குச் சிறப்பான மதிப்பளிப்புகள் செய்யப்படுகின்றன.

130 தமிழாலயங்களின் வரவு செலவு சார்பான நிதிச் செயற்பாடுகளைச் சரியான முறையில் நிதிப்பிரிவினர் கண்காணித்துவருகின்றனர்.

கல்விக் கழகத்தின் அனைத்துச் செயற்பாடுகளையும் திட்டமிடல், நடைமுறைப்படுத்தல், நிறைவேற்றுதல் போன்ற அனைத்து விடயங்களையும் நடுவச்செயலகம் செய்துவருகின்றது. நடுவச் செயலகத்தின் விரிவான செயற்பாடுகளை இங்கே அழுத்தி அறிந்துகொள்ளலாம்.
 
Free business joomla templates