TBVWebLogo

வடமாநிலக் கொற்றிங்கன் அரங்கில் 32ஆவது அகவை நிறைவில்தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப்பொறிமுறைகளுக்கு அமைவாகத் திட்டமிட்டவாறு ஐந்து அரங்குகளில் 32ஆவது அகவை நிறைவு விழாக்களைச் சிறப்போடு நடாத்திவருகிறது. தாயகனின் சிந்தனையைப் பதியமிடும் வகையில் வேற்றுமொழிச் சூழலிற் பிறந்து வளரும் தமிழ்ச் சிறார்களை அணியப்படுத்தி மொழி, கலை, பண்பாடு, விளையாட்டு என ஆற்றலுடையோராய் வளர்த்தெடுப்பதை நோக்காகக் கொண்டு தமிழ்க் கல்விக் கழகம் செயற்பட்டு வருகிறது. அதன் பயனாகப் பெரு மற்றும் சிறு நகரங்களென வாழும் பெருமளவிலான தமிழ்க் குழந்தைகள் தமிழ்மொழி அறிந்தவர்களாக இருப்பதற்குத் தமிழ்க் கல்விக் கழகத்தினது தன்னலமற்ற சிந்தனையும் செயற்பாடும் கரணியமானபோதும், இப்பெரு முயற்சியோடு இணைந்து பயணிக்கும் ஆசான்களையும், திறன்களை வெளிப்படுத்தி வெற்றிபெற்ற மாணவர்களையும் தமிழாலயங்களின் பெற்றோரையும் அழைத்து ஆண்டுதோறும் அகவை நிறைவு விழாவைச் சிறப்போடு நடாத்திவருகின்றது. 24.04.2022 ஞாயிற்றுக்கிழமை கொற்றிங்கன் அரங்கில் வடமாநிலத்திற்கான அகவை நிறைவு விழா சிறப்புற நடைபெற்றது.

சிறப்புவிருந்தினர்களாக வருகைதந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மன் கிளைப் பொறுப்பாளர் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள், துணையமைப்புகளான, யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர், யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் ஆகியோரோடு, தமிழ்க் கல்விக் கழகத்தின்; இளைய செயற்பாட்டாளர்களும் இணைந்து மங்கல விளக்கேற்றியதைத் தொடர்ந்து அகவணக்கத்தோடு அகவை நிறைவுவிழா தொடங்கியது. தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் திரு. செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரை கழகத்தின் நோக்குநிலையைச் சுட்டி நகரத், தமிழ்க் கல்விக் கழகத்தின் நோக்கமும், இளையோரின் பங்கேற்பும் ஒன்றித்த நிலையில் வடமாநில இளைய செயற்பாட்டாளர்களோடு நடுவச் செயலகத்தின் இளையோர்களும் இணைந்து விழாவைச் சிறப்பாக நடாத்தினர்.

தேர்வு மதிப்பளிப்பு, தமிழ்த்திறன் மதிப்பளிப்பு என ஆற்றல் வளங்களின் அறுவடையாக அமைய, அந்த ஆற்றல்களை அணியமாக்கும் ஆசான்களின் பணியைப் போற்றும் வகையில் 5, 10, 15 ஆண்டுகள் பணிநிறைவிற்கான மதிப்பளிப்பு நடைபெற்றதோடு, வாழ்த்துரையும் இடம்பெற்றது. வேற்றுமொழிச் சூழலுள் வாழ்கின்றபோதும் தமது பிள்ளைகளைத் தமிழோடு பயணிக்கச் செய்யும் வகையிற் தமிழ்ப் பெற்றோரின் அயராத முயற்சியோடு, ஆசான்களின் ஒருங்கிணைந்த உழைப்பின் பயனாக ஆண்டு 12 வரை தமிழாலயங்களில் கற்றலை நிறைவுசெய்தோருக்கான மதிப்பளிப்புத் தமிழ்க் கல்விக் கழகத்தின் மற்றொரு பரிமாணமாய் அழகு செய்தது. மதிப்பேற்புக்கான சிறப்பு ஆடையணிந்து நடைபவனியாக மண்டப முற்றத்திலிருந்து பார்வையாளர்களின் கரவொலியோடு அழைத்துவரப்பட்டு அவைக்கான வணக்கத்தை தெரிவித்தபின் அவர்களுக்குகென ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து தமது ஆசான்களின் மதிப்பளிப்போடு இணைந்திருந்தனர். 20 ஆண்டுகள் பணிநிறைவிற்காக “தமிழ் வாரிதி” மற்றும் 25 ஆண்டுகள் பணிநிறைவிற்காக “தமிழ் மாணி” எனப் பட்டமளிப்பு என்பவற்றோடு, முப்பது ஆண்டுகள் தமிழ்ப் பணியாற்றியமைக்காக, யேர்மனியில் தமிழ் 30 ஆண்டுகளைச் சுட்டும் வகையிலான மதிப்பளிப்பிற்கு மூன்று உடுகள் பொறிக்கப்பட்ட பதக்கத்தை பிறேமன் தமிழாலய நிர்வாகியும் ஆசிரியருமான திருமதி கனகேஸ்வரி சந்திரபாலன் அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது. கல்விக் கழகத்தின் மதிப்பளிப்பு ஒருபுறம் அமையத் தமிழாலயத்தின் உறவுகள் ஒன்றிணைந்து தமது ஆசான்களுக்கு மாலை அணிவித்து வாழ்த்துகளைப் பதிவுசெய்யதமை விழாவுக்கு மேலுமொரு சிறப்பாகும். இந்த மதிப்பளிப்புகளோடு இணைந்திருந்த 12 ஆண்டு மாணவர்களை அரங்கிற்கு அழைத்து மதிப்பளிப்போடு வாழ்த்துரைகளும் இடம்பெற்றது. இந்த இளைய தலைமுறை மாணவர்களை நோக்கி “தமிழ்த் தேசியத்திற்காகவும் தேசத்திற்காகவும் என்ன செய்யப் போகின்றோம்? என்று தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி அஞ்சனா பகீதரன் அவர்கள் தனது உரையிலே வினவியமையையும் அவதானிக்க முடிந்தது.

வடமாநிலத்தின் கொற்றிங்கன் அரங்கில் நிறைவாக விழாவைச் சிறப்பாக நடாத்திய இளையோருக்கான மதிப்பளிப்போடு, நன்றியுரையைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை மலரும் நம்பிக்கையோடு விழா நிறைவுற்றது.

error:
X