தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப் பிரிவால் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி கடந்த ஈராண்டுகளாகக் கொரோனாப் பெருந்தொற்றின் விளைவாக தமிழ்க் கல்விக் கழக நிர்வாக ஒழுங்கிற்குட்பட்ட ஐந்து மாநிலங்களில் ஒன்றான வட மாநிலத் தமிழாலயங்களிடையே நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான போட்டி திட்டமிட்டவாறு 19.02.2023அன்று ஞாயிற்றுக்கிழமை தமிழாலயங்களின் பங்கேற்போடு சிறப்பாகக் கனோவர் நகரிலே நடைபெற்றது.
அகவணக்கத்தோடு தொடங்கிய போட்டி போட்டியாளர்களின் உற்சாகமான பங்கேற்போடு, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கலை ஆர்வலர்கள் என மண்டபம் நிறைந்த மக்கள் திரளோடு நடைபெற்றது. பங்கேற்புக்கான மதிப்பளிப்புகள் ஒவ்வொரு அரங்காற்றுகை நிறைவிலும் வழங்கப்பட்டது. வெற்றியாளர்களின் நிலைகள் அறிவிக்கப்பட்டது. அதேவேளை அவர்களுக்கான மதிப்பளிப்பு எமது 33ஆவது அகவை நிறைவு விழா அரங்கிலே வழங்கப்படவுள்ளது. போட்டி முடியும்வரை அமைதியாக இருந்த மக்கள் திரள் நிறைவாகத் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற நம்பிக்கையோடு வடமாநிலத் தமிழாலயங்களிடையான கலைத்திறன் போட்டி 2023 நிறைவுற்றது.