யேர்மனி பேர்லின் நகரில் வாழும் புலம்பெயர் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தாய்மொழியையும் கலை, பண்பாட்டு விழுமியங்களையும் கற்பிப்பதனூடாக, அவற்றை அடுத்த தலைமுறையிடம் கையளிக்கும் பணியைச் சிறப்புடன் ஆற்றிவருகின்றது பேர்லின் தமிழாலயம். 22.04.2023 ஞாயிற்றுக்கிழமை தனது முத்தகவை நிறைவு விழாவை பேர்லின் நகரில் சிறப்புடன் கொண்டாடி
மகிழ்ந்தது.
மண்டபம் நிறைந்த மக்களிருக்க, சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருந்த நொய்கேளின் (கேளின்) நகரபிதா திரு.மார்டின் கிக்கல் அவர்களும் பேர்லினர் லிடர்ராவில் அமைப்பின் தலைவர் திரு. ரைமுண்ட் குறோஸ் அவர்களும் சங்ற் மரியன் பள்ளியின் அதிபர் திருமதி நொபிலிங் அம்மையார் அவர்களும் யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு.யோன்பிள்ளை சிறீரவீந்திரநாதன், தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் செம்மையாளன் திரு.செல்லையா லோகானந்தம், தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்வி மற்றும்
தமிழ்த்திறன் பிரிவுப் பொறுப்பாளர் திரு.இராஜதுரை மனோகரன், தமிழ்க் கல்விக் கழகத்தின் வெளிச்சவீடு செயல்திறன் தொகுப்புப் பொறுப்பாளர் திரு.தர்மலிங்கம் தீபன், யேர்மன் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன் மற்றும் யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநிலப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
முத்தகவை விழாவின் தொடக்க நிகழ்வுகளைத் தொடர்ந்து, ஆசிரியர், மாணவர்களுக்கான மதிப்பளிப்புகளுக்கிடையே பேர்லின் தமிழாலய மாணவர்களின் கலை நிகழ்வுகள் விழாவை மேலும் மெருகூட்டின. பேர்லின் தமிழாலயத்தின் 30 ஆண்டுகளின் வரலாற்றுப் பக்கத்தைத் தாங்கிய மலர், முரசறைந்து பாடல் ஒலிக்க, பெற்றோர்கள் புடைசூழ அரங்கினுள் வருகை கொண்ட காட்சி காண்போர் அனைவரையும் மெய்;சிலிர்க்க வைத்தது. முத்துவிழா மலரின் முதற்படியை திரு. அருங்காஞ்சிப்பிள்ளை ஞானேஸ்பரன் அவர்கள் வெளியிட்டு வைக்க, தமிழாலயத்தின் முன்னாள் நிர்வாகி திரு. இன்பகுமார் பெனடிக்ற் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
பெற்றோர்களின் பேராதரவுடன் சிறப்புற நடைபெற்ற விழா, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற உறுதியேற்புடன் நிறைவெய்தியது.