தமிழீழம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் யேர்மனி கொம்பூர்க் நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த ‘தமிழ் மாணி’ உயர்திரு. சின்னத்துரை யோகலிங்கம் அவர்கள் 16.06.2023ஆம் நாள் தாயகத்தில் புங்குடுதீவு நகருக்குச் சென்றபோது 19.06.2023 திங்கட்கிழமை அங்கு திடீர் சாவைத் தழுவிக் கொண்டார். அவரின் விருப்பத்திற்கமைய அவரின் குடும்பத்தினர் அங்கு சென்று 21.06.2023 ஆம் நாள் அவரை நல்லடக்கம் செய்தனர். யேர்மனியின் தென்மேற்கு மாநிலத்தில் மீசவ் நகரில் 23.07.2023 ஞாயிற்றுக்கிழமை அவரின் குடும்பத்தினர், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர், தமிழ்க் கல்விக் கழகத்தினர், சார்லண்ட் தமிழாலயங்கள் மற்றும் சார்புறுக்கன் தேசியச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அவருக்கான இறுதி இரங்கல் வணக்கத்தையும் மதிப்பளிப்பையும் நிகழ்த்தினார்கள். மாவீரர் பணிமனையினரும் அனைத்துலகத் தொடர்பகத்தினரும் இணைந்து தமிழீழத் தேசத்தினால் போற்றப்படும் தேசியக் கொடியையும் ‘தமிழ்ப்பற்றாளர்’ என்ற சிறப்புப் பட்டத்தையும் அவரது துணைவி, பிள்ளைகளிடம் கையளித்தனர். தமிழ்ப்பற்றாளர் என்ற சிறப்புப் பட்டம் முதன்முதலாகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயற்பாட்டாளரான உயர்திரு. சின்னத்துரை யோகலிங்கத்திற்கு வழங்கி, அவரது தேசியச் செயற்பாட்டையும் தமிழ்ப்பணியையும் பெருமைப்படுத்தியுள்ளமை தனிச்சிறப்பிற்குரியதாகும். கொம்பூர்க் தமிழாலய நிர்வாகியாகவும் பின்னர் பத்து ஆண்டுகளுக்கு மேல் தமிழ்க் கல்விக் கழகத்தின் தென்மேற்கு மாநிலச் செயற்பாட்டாளராகவும் அதன்பின் மீண்டும் கொம்பூர்க் தமிழாலய நிர்வாகியாகவும் பணியாற்றினார். தமிழ் வாரிதி, தமிழ் மாணி மற்றும் 30 ஆண்டுகள் பணிநிறைவுக்காக வழங்கப்படும் தமிழ்க் கல்விக் கழகத்தின் உயர்விருதான மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கத்தை அவரின் நெஞ்சில் பதியவைத்து மதிப்புக்குரியவராகப் போற்றப்பட்டார். 30 ஆண்டுகள் பணிநிறைவில் அவர் தாங்கிய இப்பதக்கத்தை, அவருடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் தொடர்ந்து நெஞ்சில் பதிப்பதே அவரின் தமிழ்ப்பணிக்குக் கிடைக்கும் நற்சான்றாகும்.