தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழாலயங்களில் ஒன்றான ராடொல்வ்செல் தமிழாலயம் 16ஆவது அகவை நிறைவு விழாவை 24.09.2023 ஞாயிற்றுக்கிழமை சிறப்புறக் கொண்டாடியது. ராடொல்வ்செல் லொலிபொப் குழந்தைகள் பண்பாட்டு மையத்தின் நிர்வாகி திரு.குலெர், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு.யோன்பிள்ளை சிறீரவீந்திரநாதன், தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் ‘செம்மையாளன்’ திரு.செல்லையா லோகானந்தம், தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி, தமிழ்க் கல்விக் கழகத்தின் வெளிச்சவீட்டுப் பொறுப்பாளர் திரு.தர்மலிங்கம் தீபன், தமிழ்க் கல்விக் கழக நிதிப்பிரிவின் துணைப் பொறுப்பாளர் திரு.பிரவீன் செல்வேந்திரன், தமிழ்க் கல்விக் கழகத்தின் தென்மாநிலச் செயற்பாட்டாளர் திருமதி சௌந்தராதேவி அரசரட்ணம், தமிழ்க் கல்விக் கழகத்தின் தென்மாநிலக் கலைப்பிரிவுச் செயற்பாட்டாளர் திருமதி பகீரதி ஆனந்தசிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். இவர்களுடன் அயற் தமிழாலயங்களான ருட்லிங்கன், சுவினிங்கன், றாவன்ஸ்பூர்க் ஆகிய தமிழாலயங்களின் நிர்வாகப் பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விழாவிற்கு வருகை தந்ததுடன், தமது மாணவர்களின் கலை நிகழ்வுகளையும் வழங்கி அகவை நிறைவு விழாவிற்குப் பலம் சேர்த்தனர். பொதுச் சுடரேற்றலுடன் தொடங்கிய நிறைவு விழா, தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ஆவது நினைவைத் தாங்கிச் சுடர் மற்றும் மலர் வணக்கமும் செய்யப்பட்டது. தமிழாலயத்தின் ஆசிரியர்கள், மாணவர்களுக்கான மதிப்பளிப்புகளுடன் சிறப்பு விருந்தினர்களின் வாழ்த்துரை, கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது. தொடர்ந்து ராடொல்வ்செல் தமிழாலயத்தின் 16ஆண்டுகள் வரலாற்றுப் பாதையின் செயல்திறன்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட சிறப்பு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. இம்மலரைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்கள் வெளியிட்டு வைக்க, ‘தமிழ் வாரிதி’ ஆசிரியை திருமதி மேரி அக்னஸ் றேமன் றோஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார். நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற உறுதிமொழியை உணர்த்தும் பாடலுடன் அகவை நிறைவு விழா நிறைவெய்தியது.