TBVWebLogo

30ஆவது அகவை நிறைவில் தமிழாலயம் அவுக்ஸ்பூர்க்

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறையின் கீழியங்கிவரும் 110 தமிழாலயங்களில் ஒன்றான அவுக்ஸ்பூர்க் தமிழாலயம், கடந்த 30 ஆண்டுகள் அவுக்ஸ்பூர்க் நகரில் வாழ்ந்துவரும் தமிழ்ச்சிறார்களுக்குத் தாய்மொழியையும் கலை,பண்பாட்டையும் கற்பித்து வருகின்றது. புலம்பெயர் நாட்டில் 30 ஆண்டுகள் நிலைதளராமல் செய்த பணியின் சிறப்பைச் சென்ற 30.09.2023 சனிக்கிழமை அவுக்ஸ்பூர்க் தமிழாலயத்தின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், நிர்வாகத்தினர் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து தமிழாலயத்தின் முத்துவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு.யோன்பிள்ளை சிறீரவீந்திரநாதன் அவர்களும் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் செம்மையாளன் திரு.செல்லையா லோகானந்தம் அவர்களும், தமிழ்க் கல்விக் கழகத்தின் வெளிச்சவீடு செயல்திறன் தொகுப்புப் பொறுப்பாளர் திரு. தர்மலிங்கம் தீபன், தமிழ்க் கல்விக் கழகத்தின் தென்மாநிலச் செயற்பாட்டாளர் திருமதி பிரமிளா சுரேஸ்குமார், தமிழ்க் கல்விக் கழகத்தின் தென்மாநிலக் கலைப்பிரிவின் செயற்பாட்டாளர் திருமதி பகீரதி ஆனந்தசிங்கம் அவர்களும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
இந்நாள், முன்னாள் மாணவர்களின் இணைவும் நெறிப்படுத்தலும் விழாவை மிகச் செம்மைப்படுத்திச் சிறப்புற வைத்தமையைக் காணமுடிந்தது. தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவாக மலர் வணக்கமும் சுடர் வணக்கமும் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தொடக்க நிகழ்வுகளுடன் ஆசிரியர்கள், மாணவர்களுக்கான மதிப்பளிப்புகளும் முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. சிறப்பு விருந்தினர்களின் வாழ்த்துரைகளும் கருத்துகளும் அவுக்ஸ்பூர்க் தமிழாலயத்தின் பணி மேலும் சிறக்கப் புத்துணர்வை ஊட்டியது எனலாம். நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற நம்பிக்கைப் பாடலோடு முத்துவிழாச் சிறப்புற நிறைவடைந்தது.

error:
X