மொழியைப் பாதுகாப்பதனூடாகவே எமது இனத்தின் அடையாளங்களைப் பாதுகாக்க முடியும் என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் தூரநோக்குச் சிந்தனையினால் உருவானதே தமிழ்க் கல்விக் கழகமும் அதன் கீழியங்கிவரும் தமிழாலயங்களும். அத்தமிழாலயங்களில் ஒன்றான றேகென்ஸ்பூர்க் தமிழாலயம் தமிழ்மொழியையும் கலை, பண்பாட்டு விழுமியங்களையும் றேகென்ஸ்பூர்க் நகரில் வாழும் தமிழ்ச்சிறார்களுக்குக் கற்பிக்கும் உயர்ந்த இலக்கோடு பணியாற்றி வருகிறது. கடந்த 16 ஆண்டுகள் தான் ஆற்றிய பணியின் சிறப்பையும் பெருமையையும் 16ஆவது அகவை நிறைவு விழாவாக 21.10.2023 சனிக்கிழமை சிறப்புறக் கொண்டாடி மகிழ்ந்தது. சிறப்பு விருந்தினர்களாக றேகென்ஸ்பூர்க் குமுக சனநாயகக் கட்சியின் தலைவர் கலாநிதி Dr. தோமஸ் பூர்கர், றேகென்ஸ்பூர்க் உயர்நிலைப் பள்ளியின் அதிபர் Dr. மிகைல் வொல்க், உயர்நிலைப் பள்ளியின் நிர்வாகப் பணியாளரான திரு. வொல்வ்கங் ஓற், ஒருங்கிணைப்பு மற்றும் இடப்பெயர்வுக்கான பணியகத்தின் நிர்வாகப் பணியாளர் திருமதி யூலியா லங், அருட்தந்தை திரு. மரிய அருள் ஸ்டீபன் ஆகியோருடன், தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் ‘செம்மையாளன்’ திரு.செல்லையா லோகானந்தம், தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி, தமிழ்க் கல்விக் கழகத்தின் பரப்புரைப் பொறுப்பாளர் திரு.தர்மலிங்கம் தீபன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநிலப் பொறுப்பாளர் திரு. கனகையா சிறீகாந்தன் மற்றும் தமிழ்க் கல்விக் கழகத்தின் தென்மாநிலச் செயற்பாட்டாளர் திருமதி பிரமிளா சுரேஸ்குமார், தமிழ்க் கல்விக் கழகத்தின் தென்மாநிலக் கலைப்பிரிவுச் செயற்பாட்டாளர் திருமதி பகீரதி ஆனந்தசிங்கம் மற்றும் அயற் தமிழாலயங்களின் நிர்வாகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். தொடக்க நிகழ்வுகளுடன் ஆசிரியர்கள், மாணவர்களுக்கான மதிப்பளிப்புகளும் முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. சிறப்பு விருந்தினர்களின் வாழ்த்துரைகளும் கருத்துகளும் றேகென்ஸ்பூர்க் தமிழாலயத்தின் பணி மேலும் சிறக்கப் புத்துணர்வை ஊட்டியது எனலாம். மாணவர்களின் கலை நிகழ்வுகளும் விழாவிற்குச் சிறப்புச் சேர்த்தன.
தொடர்ந்து றேகென்ஸ்பூர்க் தமிழாலயத்தின் 16ஆண்டுகள் வரலாற்றுப் பாதையில் ஆற்றிய செயல்திறன்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட சிறப்பு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. இம்மலரைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநிலப் பொறுப்பாளர் திரு.கனகையா சிறீகாந்தன் அவர்கள் வெளியிட்டுவைக்க, தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு.மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்கள் பெற்றுக்கொண்டார். நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற நம்பிக்கைப் பாடலோடு 16ஆவது அகவை நிறைவு விழாச் சிறப்புற நிறைவெய்தியது.