தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 10.02.2013 அன்று பென்ஸ்கைம் தமிழாலயம் தொடங்கப்பட்டது. பென்ஸ்கைம் நகரிலும் அதனை அண்டியுள்ள நகரங்களிலும் வாழும் தமிழ்ச் சிறார்களுக்குத் தாய்மொழியையும் கலை, பண்பாட்டு மரபுகளையும் கற்பிக்கும் உன்னத பணியில் ஈடுபட்டுவரும் பென்ஸ்கைம் தமிழாலயம், விரைந்து நகர்ந்த காலவோட்டத்தில் தனது 10ஆவது அகவை நிறைவை 17.12.2023 ஞாயிற்றுக்கிழமை சிறப்புடன் கொண்டாடியது.
நிலத்தையும் மொழியையும் காக்கத் தமது இன்னுயிரை ஈகம் செய்தவர்கள் நினைவாகப் பொதுச்சுடரை பென்ஸ்கைம் நகரசபை உறுப்பினர் திரு.ஒலிவர் றோய்டெர் அவர்கள் ஏற்றிவைத்து விழாவைத் தொடக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருந்த பென்ஸ்கைம் நகரசபை உறுப்பினர் திரு.ஒலிவர் றோய்டெர், கைடில்பேர்க் நவீன விரிவுரையாளர் திருமதி அன்னே மொகபத்தரா ஆகியோருடன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கெசன் மாநிலப் பொறுப்பாளர் திரு.வைரவநாதன் நிமலன் மற்றும் தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்வி மற்றும் தமிழ்த்திறன் பிரிவுப் பொறுப்பாளர் திரு.இராஜ மனோகரன், கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. மாரக்கண்டு பாஸ்கரமூர்த்தி, பரப்புரைப் பிரிவுப் பொறுப்பாளர் திரு.தர்மலிங்கம் தீபன், கலைப்பிரிவின் துணைப் பொறுப்பாளர் முனைவர் சிவநேசன் விபிலன் மற்றும் பேர்க்ஸ்ராச தேசியச் செயற்பாட்டாளர் திரு.சின்னத்துரை துரைலிங்கம் ஆகிய சிறப்பு விருந்தினர்களுடன் பென்ஸ்கைம் தமிழாலயத்தின் நிர்வாகி திருமதி செல்வதி யோகேந்திரன், பெற்றோர் பிரதிநிதி திரு.தேவராசா சிறீதர் ஆகியோரும் இணைந்து மங்கல விளக்கினை ஏற்றிவைத்தனர்.
ஆசிரியர்கள், மாணவர்களுக்கான மதிப்பளிப்புகளுடன் கலைநிகழ்வுகள், சிறப்புரைகள் மற்றும் வாழ்த்துரைகள் எனத் தொடர்ந்த விழாவிற்குச் சிறப்புச் சேர்க்கும் நிகழ்வாக 10 ஆண்டுகள் பென்ஸ்கைம் தமிழாலயத்தின் செயல்திறனாளர்களான ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றிணைந்து ஆற்றிய செயல்திறன்களை உள்ளடக்கி உருவாக்கம் பெற்ற சிறப்புமலர் வெளியிட்டு வைக்கப்பட்டமை விழாவின் சிறப்புக்கு மேலும் சிறப்பூட்டியது. சிறப்புமலரைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு.மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்கள் வெளியிட்டு வைக்க, தமிழாலயத்தின் பெற்றோர் பிரதிநிதி திரு.தேவராசா சிறீதர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
அயற் தமிழாலயங்களின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் விழாவிற்கு வருகைதந்து சிறப்பித்ததோடு, சில தமிழாலயங்கள் தமது மாணவர்களின் கலைநிகழ்வுகளையும் வழங்கிச் சிறப்பித்தனர். நிறைவாகத் தமிழரின் தாகமாகத் திகழும் தமிழீழத் தாகத்தை அடையும் நம்பிக்கையோடு பென்ஸ்கைம் தமிழாலயத்தின் 10ஆவது அகவை நிறைவு விழாச் சிறப்புடன் நிறைவுற்றது.