TBVWebLogo

தமிழ் மரபுத் திங்களோடு தமிழாலயங்களின் எழுகை

வெற்றுக்கரங்களோடு தாயகத்தை விட்டுத் திசைதெரியாது புலம்பெயர்ந்தபோது, தமிழருடன் கூடிப்பயணித்த மொழியையும் கலைகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் அடுத்த தலைமுறைக்கு ஊட்டுவதில் அமுதசுரபியாகத் துலங்கும் தமிழாலயங்கள், தமிழ் மரபுத் திங்களைச் சிறப்பாக முன்னெடுத்துவருகின்றன. தமிழர் நிலத்தின் பண்பாட்டுப் பேராற்றல் காலவெளியில் கரைந்துவிடாது என்பதைத் தமிழாலயங்களின் தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் பறைசாற்றி நிற்பதை இந்த ஆண்டும் காணமுடிகிறது.

உலகின் ஒப்புவமையற்ற சக்தியாக விளங்கி, உயிரிகளின் வாழ்வுக்கு உறுதுணைபுரியும் கதிரவனின் கரம்பற்றும் வகையில், தமிழன் வயலிலே விளைந்த புதுநெல்லோடு கூலங்கள், பழங்கள், கரும்பு என அனைத்தையும் மகிழ்வோடு படையலிட்டான். படையலிட்டதைப் பகிர்ந்தளித்து விருந்தோம்பினான். உண்டவர் மனமகிழ்வுகண்டு களிப்படைந்தான். அந்த இயல்புநிறை வாழ்வியற் சூழல் புலம்பெயர் தேசத்தில் இல்லாதபோதும், தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகத்தின் கீழியங்கிவரும் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்கள் கடந்த யனவரி 15ஆம் நாள் முதல் தத்தமது வளவல்லமைகளுக்கு ஏற்பத் தமிழர் திருநாளைக் கொண்டாடி வருகின்றன.

தமிழாலயங்கள் அமைந்திருக்கும் நகரத்து மக்களோடு இணைந்து தமிழர் திருநாள் பெருவிழாவாக யேர்மனிய தேசமெங்கும் வியாபித்து நிற்கிறது. இந்த ஆண்டு மற்றுமொரு சிறப்பு நிகழ்வாகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் 2023ஆம் ஆண்டின் செயல்திறன் தொகுப்பான வெளிச்சவீடு ஆவணமும் தமிழர் திருநாள் கொண்டாடப்பட்ட தமிழாலயங்களில் சிறப்பாக வெளியிட்டு வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

error:
X