TBVWebLogo

தமிழ்க் கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்ட அரையாண்டுத்தேர்வு – 2023/2024

புலம்பெயர்ந்து யேர்மனியில் வாழும் தமிழ்ச் சிறார்களுக்குத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் உயர்ந்த சிந்தனையோடும் இலக்கோடும் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம், தனது நிர்வாகத்தின் கீழியங்கும் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்து இவ்வாண்டுக்கான அரையாண்டுத்தேர்வை 27.01.2024 சனிக்கிழமை சிறப்புடன் நிறைவேற்றியுள்ளது. இத்தேர்வு தமிழ்க் கல்விக் கழகத்தின் கட்டமைக்கப்பட்ட நிர்வாகப் பொறிமுறைகளைப் பயன்படுத்தி, கண்ணியத்துடனும் நேர்மையுடனும் நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தமது தகுதிநிலைகளையறிந்து, குறைகளைக் களைந்து யூன் மாதம் நடைபெறவிருக்கும் அனைத்துலகப் பொதுத்தேர்விற்குத் தம்மைத் தயார்படுத்திக்கொள்ள இந்த அரையாண்டுத்தேர்வு உதவுகின்றது.

இவ்வனைத்துலக அரையாண்டுத்தேர்வு நாடுதழுவிய மட்டத்தில் 100க்கு மேற்பட்ட தேர்வு நிலையங்களில் நடைபெற்றது. ஒவ்வொரு நிலையத்திற்கும் ஒவ்வொரு சிறப்புக் கண்காணிப்பாளர் என்ற அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியப்பெருந்தகைகள் தமிழ்க் கல்விக் கழகத்தின் விதிமுறைகளுக்கேற்பக் கடமையுணர்வோடும் தமிழை வளர்க்கும் நல்லெண்ணத்தோடும் இப்பணியில் ஈடுபட்டனர். பெரும்பாலான தமிழாலயங்கள் தனியாகவும் சில தமிழாலயங்கள் இணைந்தும் தேர்வு நிலையங்களை அமைத்திருந்தன.

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் வழங்கப்பட்ட தேர்வுத் தாள்கள், தமிழ்க் கல்விக் கழகத்தின் தேர்வுப்பிரிவினரால் நேர்த்தியாகப் பொதியாக்கப்பட்டு, தாயமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்வு நாளன்று காலை 08:00 மணி தொடக்கம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் தேர்வு மண்டபம் நோக்கி வருகைதரத் தொடங்கினார்கள். 08:30 மணிக்குத் தாயமைப்புச் செயற்பாட்டாளர்கள் தேர்வுத்தாள் பொதியை அந்தந்தத் தேர்வு நிலையங்களின் சிறப்புக் கண்காணிப்பாளரிடம் கையளித்ததைத் தொடர்ந்து, 09:00 மணிக்குத் தொடக்க நிகழ்வுகளுடன் அனைத்துலக அரையாண்டுத்தேர்வு தொடங்கிவைக்கப்பட்டது. காலை 09:30 மணிக்குத் தேர்வாளர்கள் அனைவரையும் தேர்வு மண்டபத்தில் அமர்த்திச் சரியாக 10:00 மணிக்குத் தேர்வு தொடங்கியது. ஆண்டு 1 தொடக்கம் 3 வரை 11:30 மணிக்கும், ஆண்டு 4 தொடக்கம் 6 வரை 12:00 மணிக்கும், ஆண்டு 7 தொடக்கம் 9 வரை 12:30 மணிக்கும் ஏனைய வகுப்புநிலைகளுக்கு 13:00 மணிக்கும் அரையாண்டுத்தேர்வு நிறைவேறியது.

தாம் கற்றவற்றை மிக ஆவலுடன் சிறப்புறத் தேர்வெழுதிய மாணவர்கள், தேர்வு நிறைவடைந்த பின் தங்கள் கருத்துகளைப் பெற்றோர்களுடனும் சகமாணவர்களுடனும் தங்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களுடனும் பரிமாறி மகிழ்ந்ததைக் கண்காணிக்கக் கூடியதாக இருந்தது.

error:
X