தமிழ்க் கல்விக் கழகத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் தமிழ்த்திறன் போட்டியின் 2023ஆம் ஆண்டிற்கான தமிழ்த்திறன் இறுதிப் போட்டியும் அதன் முத்தகவை நிறைவு விழாவும் 02.03.2024 சனிக்கிழமை முன்சன்கிளாட்பாக் நகரில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கடந்த 30 ஆண்டுகள் தமிழ்த்திறன் போட்டிக்காக நேரம் காலம் பாராது உழைத்துவரும் தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழ்த்திறன் பிரிவுப் பொறுப்பாளர் திரு. இராஜதுரை மனோகரன் அவர்களின் பணிச்சிறப்பைப் பாராட்டி, சிறப்பு மதிப்பளிப்பு நிகழ்வினை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஒழுங்குசெய்திருந்தனர். அச்சிறப்பு நிகழ்வை திரு.ந.நிலவன் அவர்கள் பொறுப்பெடுத்து நெறிப்படுத்தினார்.
தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர், பிரிவுசார் பொறுப்பாளர்கள், துணைப் பொறுப்பாளர்கள் மற்றும் முன்னிலை, மாநிலச் செயற்பாட்டாளர்கள் இணைந ;து திரு. இராஜதுரை மனோகரன் அவர்களையும் அவரது துணைவியாரையும் அரங்கிற்கு அழைத்துவந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சிந்தனையோடு தொடங்கிய அந்நிகழ்வில், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறீரவீந்திரநாதன் அவர்களால் திரு. இராஜதுரை மனோகரன் அவர்களுக்குத் “தமிழ்த்திறனாளன்” என்ற சிறப்புப் பட்டமும் சிறப்பு வருகையாளராக வருகை தந்திருந்த அனைத்துலகத் தொடர்பகத்தின் மத்திய நிர்வாகப் பிரிவு உறுப்பினரும் அனைத்துலகத் தமிழ்க் கல்விக் கழக விடயங்;களுக்கான இணைப்பாளருமாகிய திரு. இரங்கன் அவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முத்திரை முன்பக்கமும் தமிழ்க் கல்விக் கழகத்தின் முத்திரை பின்பக்கமும் பொறிக்கப்பட்ட பதக்கத்தை திரு. இராஜதுரை மனோகரன் அவர்களுக்கு வழங்கி வாழ்த்துரையும் வழங்கினார் கள். இவர்களுடன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் துணைப் பொறுப்பாளர் திரு. சுப்பிரமணியம் ஜெயசங்கர் அவர்களும் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்களும் அரங்கில் அமர்ந்திருந்து நிகழ்வைச் சிறப்பித்தனர். “தமிழ்த்திறனாளன்” திரு. இராஜதுரை மனோகரன் அவர்களின் ஏற்புரையை அடுத்து “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற உறுதியேற்புடன் நிகழ்வு சிறப்புற நிறைவுபெற்றது. தமிழீழத் தேசியக் கொடியின் முன்னால் தாய்மண்ணின் விடுதலையை நெஞ்சில் தாங்கியவர்களால் இம்மதிப்பளிப்பு வழங்கப்பட்டது சிறப்புக்குள் சிறப்பானது.