TBVWebLogo

பொற்ஸ்கைம் தமிழாலயத்தில் பரதக்கலைப் பயிலரங்கு தொடங்கியுள்ளது

”கல்வியும் கலையும் நம்மிரு கண்கள் நல்தமிழ்மொழி எங்கள் உயிராகும்” என்ற உயரிய சிந்தனையோடு செயலாற்றி வரும் தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் தமிழாலயங்களில் ஒன்றான பொற்ஸ்கைம் தமிழாலயத்தின் பெற்றோர் மற்றும் கலையார்வலர்களின் ஆர்வமும் நிர்வாகத்தினரின் விடாமுயற்சியும் கரம்கோர்த்ததன் பயனாக நுண்கலைகளில் ஒன்றான பரதக்கலை வகுப்பு 10.03.2024ஆம் நாளன்று தொடங்கப்பட்டுள்ளது.
அகவணக்கத்தோடு தொடங்கிய நிகழ்வில் பொற்ஸ்கைம் தமிழாலய நிர்வாகி திருமதி மோகனராஜி பிரதீபன் அவர்களின் தொடக்கவுரையைத் தொடர்ந்து, நடன ஆசிரியரின் அறிமுகம் இடம்பெற்றது. பயிலரங்கத் தொடக்க நாளிற் பரதக்கலையைக் கற்பதற்காகப் பதினைந்து மாணவிகளும் அவர்களது பெற்றோரும், ஆர்வலர்களும் ஆர்வத்தோடு இணைந்திருந்தனர்.
பொற்ஸ்கைம் தமிழாலய நிர்வாகத்தின் கீழ் நடன ஆசிரியையாகப் பொறுப்பேற்று வருகைதந்திருந்த திருமதி நர்த்தனா நிகஸ்தியன் அவர்களாற் பரதக்கலைப் பயிலரங்க வகுப்பானது பதினைந்து மாணவிகளோடு சலங்கை வழிபாடு செய்யப்பட்டு நடன ஆசிரியரது கரங்களால் மாணவிகளுக்கு சலங்கை அணிவிக்கப்பட்டுக் கற்றல் செயற்பாடு நடைபெற்றது.
தமிழ்க் கல்விக் கழகத்திலிருந்து பயிலரங்கத் தொடக்க நிகழ்வுக்கு வருகைதந்திருந்த தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு. செல்லையா லோகானந்தம் தமிழ்க் கல்விக் கழகக் கலைப்பிரிவின் பொறுப்பாளர் திரு.மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி மற்றும் தமிழ்க் கல்விக் கழகத்தின் தென்மாநிலச் செயற்பாட்டாளர்களில் ஒருவரான திருமதி பிரமிளா சுரேஸ்குமார் ஆகியோரின் வாழ்த்துரைகளும் இடம்பெற்றன.
பெற்றோர்களின் ஆர்வமும் மாணவர்களின் ஊக்கமும் நிர்வாகத்தினரது அயராத செயற்பாடும் ஒன்றிணைந்து தமிழாலயம் பொற்ஸ்கைமானது ஒரு புதிய பாய்ச்சலை நோக்கி நகர்வதைச் சுட்டியவாறு பரதக்கலைப் பயிலரங்கத்தின் தொடக்கநாள் சிறப்பாக நிறைவுபெற்றது. தொடர்ந்து பரதக்கலைப் பயிலரங்கு நடைபெறவுள்ளது. பொற்ஸ்கைம் நகரைச் சூழவுள்ள பெற்றோர்கள் தமது பிள்ளைகளைப் பரதக்கலை பயிற்றுவிக்க விரும்பினால் பொற்ஸ்கைம் தமிழாலயத்தின் நிர்வாகத்தோடு தொடர்புகொண்டு மேலதிக விவரங்களைப்பெற்று இணைந்து கொள்ளலாம்.

error:
X