TBVWebLogo

34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமத்திய மாநிலம்

புலம்பெயர்ந்து யேர்மனியில் வேரூன்றிக் கிளைபரப்பியுள்ள தமிழ்க் குமுகாயத்தினரின் பிள்ளைகளுக்கும் அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கும் எமது இனத்தின் அடையாளங்களான மொழியையும் அதன் பண்பாட்டு மரபுகளையும் தமிழர் கலைகளையும் கற்பிக்க வேண்டியது அகத்தியமானது என்ற காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு, கடந்த 34 ஆண்டுகளாக அவ்வுன்னத பணியை யேர்மனியில் செய்து வருகிறது தமிழ்க் கல்விக் கழகம்.
தமிழ்க் கல்விக் கழகத்தின் ஆண்டுச் செயற்பாட்டு நிரலின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப, வகுக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களிலும் தனது அகவை நிறைவு விழாவை ஒவ்வொரு ஆண்டும் சிறப்புடன் கொண்டாடி வருகிறது. 34ஆவது அகவை நிறைவு விழாவின் முதல் விழாவை மத்திய மாநிலத்தின் நெற்றெற்றால் அரங்கில் 06.04.2024 சனிக்கிழமை சிறப்புடன் கொண்டாடியதைத் தொடர்ந்து, தனது அடுத்த விழாவை 13.04.2024 சனிக்கிழமை வடமத்திய மாநிலத்தின் கற்றிங்கன் அரங்கில் கொண்டாடியது. காலை 09:30 மணிக்குத் தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக உயிரீகம் செய்தவர்களுக்கான நினைவுப் பொதுச்சுடரேற்றலுடன், விழாவிற்கு வருகைதந்திருந்த சிறப்பு வருகையாளர்களையும் மாணவ வெற்றியாளர்களையும் மதிப்பளிப்புப்பெறும் ஆசான்கள், செயற்பாட்டாளர்களையும் இசையுடன் அரங்கிற்குள் அழைத்து வந்தனர். அறப்போர் புரிந்து வீரகாவியமாகிய ‘நாட்டுப்பற்றாளர்’ அன்னை பூபதி அவர்களுக்குச் சுடரேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தியதன் பின், அகவை நிறைவு விழா மங்கல விளக்கேற்றல், அகவணக்கம், தமிழாலயகீதம் எனத் தொடக்க நிகழ்வுகளின் நிரலில் தொடங்கியது.
சிறப்பு வருகையாளர்களாக வருகைதந்த என்னெப்பெற்றால் றூர் மாவட்ட நிர்வாகி திரு. ஒலாவ் சாடே, யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வடமத்திய மாநிலச் சிறப்புப் பொறுப்பாளர் திரு.கணபதிப்பிள்ளை ஜெயக்குமார், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மத்திய மாநிலம் 1இன் பொறுப்பாளர் திரு.சின்னையா நாகேஸ்வரன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வடமத்திய மாநிலம் 1இன் பொறுப்பாளர் திரு.முத்துவேல் ஜெயவலதாஸ், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் மத்தி மற்றும் வடமத்திய மாநிலப் பொறுப்பாளர் ‘தமிழ் மாணி’ திருமதி கிருபாரதி சிவராம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மத்திய மாநிலம் 1இன் துணைப் பொறுப்பாளர் திரு.லதக்குமார் சந்திரன், வாறன்டோர்வ் தமிழாலயத்தின் நிர்வாகி ‘தமிழ் மாணி’ திரு. திரு.சதானந்தம் இராஜேந்திரம், யேர்மன் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் கேதீஸ்வரன் சயந்தன் மற்றும் யேர்மன் இளையோர் அமைப்பின் துணைப் பொறுப்பாளர் செல்வி வானதி நிர்மலதாசன் ஆகியோர் மங்கலவிளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர்.
தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் ‘செம்மையாளன்’ திரு.செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, மதிப்பளிப்புகள் தொடங்கின. தமிழ்க் கல்விக் கழகத்தின் செயற்பாட்டாளர்களும் மாநில மட்டத்திலான இளைய செயற்பாட்டாளர்களின் பங்கேற்பும் ஒன்றாக இணைந்து விழாவை வளப்படுத்தின.
அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணித்திறனாற்றிய ஆசான்கள், செயற்பாட்டாளர்களுக்கான மதிப்பளிப்புகளோடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ‘தமிழ் வாரிதி’ என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ‘தமிழ் மாணி’ என்றும் 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கமும் வழங்கிப் பட்டமளிப்பும் நடைபெற்றது.
டோட்முன்ட் தமிழாலயத்தின் ஆசான் ‘தமிழ் மாணி’ திரு.வல்லிபுரம் மனோகரன், கேர்ன தமிழாலயத்தின் ஆசான் ‘தமிழ் மாணி’ திருமதி சறோஜினிதேவி தங்கரட்ணம், மால் தமிழாலயத்தின் ஆசான் ‘தமிழ் மாணி’ திரு.செல்லத்துரை சிவராசா, வாறன்டோர்வ் தமிழாலயத்தின் ஆசான் ‘தமிழ் மாணி’ திரு.சதானந்தம் இராஜேந்திரம், தமிழ்க் கல்விக் கழகத்தின் வடமத்திய மாநிலச் செயற்பாட்டாளர் ‘தமிழ் மாணி’ திரு.கந்தையா அம்பலவாணபிள்ளை ஆகியோர் 30 ஆண்டுகள் பணிநிறைவுக்கான மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டமை சிறப்பிற்குரியதாகும்.
கலைத்திறன் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களின் செயல்திறன்களை ஒன்றிணைத்ததன் விளைச்சலால் தமிழாலயங்கள் பெற்ற புள்ளிகளினடிப்படையில் சிறந்த தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. நாடுதழுவிய மட்டத்தில் கலைத்திறன் போட்டியில் வாறன்டோர்வ் தமிழாலயம் 1ஆம் நிலையையும் கலைத்திறன் மாநிலப் போட்டியில் வாறன்டோர்வ், போகும், எசன் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் பெற்றுக்கொண்டன.
தமிழாலயங்களில் மழலையராக இணைந்து ஆண்டு 12ஐ நிறைவுசெய்த 41 மாணவர்கள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே அழைத்துவரப்பட்டு, தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்விப்பிரிவுப் பொறுப்பாளர் ‘தமிழ்த்திறனாளன்’ திரு. இராஜ மனோகரன் அவர்களால் வாழ்த்தி மதிப்பளிக்கப்பட்டனர். மதிப்பளிப்புகளுக்கு மத்தியில் தமிழாலய மாணவர்களின் உரை, கவிதை, விடுதலைக் கானங்கள் மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகள் விழாவிற்குச் சிறப்புச் சேர்த்தன. தாயகத்தின் விடியலுக்கான பற்றுறுதியோடு 19:00 மணிக்கு அகவை நிறைவு விழாச் சிறப்புடன் நிறைவெய்தியது. தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப வகுக்கப்பட்டுள்ள மற்றைய மாநிலங்களிலும் அகவை நிறைவு விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

error:
X