யேர்மனியில் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை நிர்வகித்துவரும் தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவு விழா வடமாநிலத்தின் பீலபெல்ட் அரங்கில் 14.04.2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காலை 09:30 மணிக்குத் தமிழீழ மண்ணின் விடுதலைக்காக உயிரீகம் செய்தவர்களுக்கான நினைவுப் பொதுச்சுடரேற்றலுடன், விழாவிற்கு வருகைதந்திருந்த சிறப்பு வருகையாளர்களையும் மாணவ வெற்றியாளர்களையும் மதிப்பளிப்புப்பெறும் ஆசான்கள், செயற்பாட்டாளர்களையும் இசையுடன் அரங்கிற்குள் அழைத்து வந்தனர். அறப்போர் புரிந்து வீரகாவியமாகிய ‘நாட்டுப்பற்றாளர்’ அன்னை பூபதி அவர்களுக்குச் சுடரேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தியதன் பின், அகவை நிறைவு விழா மங்கல விளக்கேற்றல், அகவணக்கம், தமிழாலயகீதம் எனத் தொடக்க நிகழ்வுகளின் நிரலில் தொடங்கியது.
சிறப்பு வருகையாளர்களான பீலபெல்ட் நகரத்தின் துணைமுதல்வர் திரு.இன்கோ நூர்ன்பேர்கர், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.நடராசா திருச்செல்வம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வடமாநிலம் 1இன் பொறுப்பாளர் திரு.இளையதம்பி துரைஐயா, தமிழர் கலை, பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் திரு.சுந்தரலிங்கம் கோபிநாத், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் துணைப் பொறுப்பாளர் செல்வி தமிழினி பத்மநாதன், தமிழ்க் கல்விக் கழகத்தின் வடமாநிலக் கல்விப்பிரிவுச் செயற்பாட்டாளர் திருமதி யமுனாராணி தியாபரன், பிறீமன் தமிழாலயத்தின் நிர்வாகி திருமதி கனகேஸ்வரி சந்திரபாலன், யேர்மன் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் கேதீஸ்வரன் சயந்தன் மற்றும் யேர்மன் இளையோர் அமைப்பின் துணைப் பொறுப்பாளர் செல்வி வானதி நிர்மலதாசன் ஆகியோர் மங்கல விளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர். தொடர்ந்து தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் ‘செம்மையாளன்’ திரு. செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையுடன் மதிப்பளிப்பு நிகழ்வுகள் தொடங்கின.
அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணித்திறனாற்றிய ஆசான்கள், செயற்பாட்டாளர்களுக்கான மதிப்பளிப்புகளோடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ‘தமிழ் வாரிதி’ என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ‘தமிழ் மாணி’ என்றும் 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கமும் வழங்கிப் பட்டமளிப்பும் நடைபெற்றது. பேர்லின் தமிழாலயத்தின் ஆசிரியர் ‘தமிழ் மாணி’ திருமதி ரஞ்சினி கருணாகரமூர்த்தி அவர்கள் 30 ஆண்டுகள் பணிநிறைவுக்கான மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழாலயங்களில் மழலையராக இணைந்து ஆண்டு 12ஐ நிறைவுசெய்த 25 மாணவர்கள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே அழைத்துவரப்பட்டு, தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்விப்பிரிவுப் பொறுப்பாளர் ‘தமிழ்த்திறனாளன்’ திரு. இராஜ மனோகரன் அவர்களால் வாழ்த்தி மதிப்பளிக்கப்பட்டனர். மதிப்பளிப்புகளுக்கு மத்தியில் தமிழாலய மாணவர்களின் உரை, கவிதை, மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகள் விழாவிற்குச் சிறப்புச் சேர்த்தன. தாயகத்தின் விடியலுக்கான பற்றுறுதியோடு 17:30 மணிக்கு அகவை நிறைவு விழாச் சிறப்புடன் நிறைவெய்தியது. தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவு விழா மத்தி, வடமத்தி மற்றும் வடமாநிலத்தில் நிறைவுற்றதைத் தொடர்ந்து, தென்மேற்கு மாநிலத்தில் 20.04.2024 சனிக்கிழமையும் தென்மாநிலத்தில் 27.04.2024 சனிக்கிழமையும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.