யேர்மனியிலே 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்து நெறிப்படுத்திவரும் தமிழ்க் கல்விக் கழகம் தென்மேற்கு மாநிலத்தில் 34ஆவது அகவை நிறைவு விழாவை 20.04.2024 சனிக்கிழமையன்று எஸ்லிங்கன் நகரில் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் இணைந்து பயணிக்கும் அனைவரையும் அழைத்துச் சிறப்போடு கொண்டாடியது.
தமிழ்க் கல்விக் கழகத்தின் பல்வேறு செயற்பாட்டுக் களங்களில் பயணித்து 19.06.2023ஆம் நாளன்று காலமாகிவிட்ட ‘தமிழ்ப்பற்றாளர், தமிழ் மாணி’ உயர்திரு. சின்னத்துரை யோகலிங்கம் அவர்களின் அறப்பணியைப் போற்றிடும் வகையிலே ‘தமிழ்ப்பற்றாளர், தமிழ் மாணி’ உயர்திரு சின்னத்துரை யோகலிங்கம் நினைவு அரங்கமாகத் தென்மேற்கு மாநில அரங்கைத் தமிழ்க் கல்விக் கழகம் அணிசெய்திருக்க, காலை 09:30 மணிக்குத் தமிழ்மொழியையும் தாய்நிலத்தையும் காத்திட விதையானோரின் நினைவோடு பொதுச்சுடரேற்றி விழாத் தொடங்கியது.
ஈழதேசத்தைக் காத்திட அறவழிப்போர் புரிந்து வீரகாவியமாகிய ‘நாட்டுப்பற்றாளர்’ அன்னை பூபதி அவர்களுக்கு சுடரேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. ‘நாட்டுப்பற்றாளர்’ வைத்திலிங்கம் பரமேஸ்வரன் அவர்களது திருவுருவப்படமும் வைக்கப்பட்டிருந்தது. அகவை நிறைவு விழா மங்கல விளக்கேற்றல், அகவணக்கம், தமிழாலயகீதம் எனத் தொடக்க நிகழ்வுகளின் நிரலில் தொடங்கியது.
சிறப்பு வருகையாளர்களாக வருகைதந்த றைன்லாண்ட் பால்ஸ் மாநிலத்தின் அரசவை உறுப்பினர் திரு.புளோறியன் மாயர், லண்டவ் வெளிநாட்டவர் ஒருங்கிணைப்பு அவை உறுப்பினர் திரு.திருட்டின் வோங், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் றைன்லாண்ட் பால்ஸ் மாநிலத்தின் பொறுப்பாளர் திரு. சபாபதி விமலநாதன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்லண்ட் மாநிலத்தின் பொறுப்பாளர் திரு. கனகசபை பரணிரூபசிங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் றைன்லாண்ட் பால்ஸ் மாநிலத்தின் துணைப் பொறுப்பாளர் திரு.கந்தையா பூபால்;, யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் நீண்டகால உறுப்பினரும் வீஸ்பாடன் நகரச் செயற்பாட்டாளர் திருமதி சிறீமதி சிவலிங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கால்ஸ்றுகே நகரத்தின் கோட்டப் பொறுப்பாளர் திரு.நாராயணபிள்ளை தேவஞானம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மன்கைம் நகரத்தின் கோட்டப் பொறுப்பாளர் திரு. சுப்பிரமணியம் சுவேந்திரன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் புறுக்சால் நகரத்தின் கோட்டப் பொறுப்பாளர் திரு.திருநாவுக்கரசு ஜீவராசா ஆகியோர் மங்கலவிளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர்.
தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் ‘செம்மையாளன்’ திரு.செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணித்திறனாற்றிய ஆசான்கள், செயற்பாட்டாளர்களுக்கான மதிப்பளிப்புகளோடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ‘தமிழ் வாரிதி’ என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ‘தமிழ் மாணி’ என்ற பட்டமும் வழங்கி மதிப்பளிப்புகளும் நடைபெற்றது.
கலைத்திறன் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களின் செயல்திறன்களை ஒன்றிணைத்ததன் விளைச்சலால் தமிழாலயங்கள் பெற்ற புள்ளிகளினடிப்படையில் சிறந்த தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. நாடுதழுவிய மட்டத்தில் கலைத்திறன் போட்டியில் பிராங்பேட் தமிழாலயம் 2ஆம் நிலையையும் கலைத்திறன் மாநிலப் போட்டியில் பிராங்பேட், கால்ஸ்றுகே, லண்டவ் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் பெற்றுக்கொண்டன.
தமிழாலயங்களில் மழலையராக இணைந்து ஆண்டு 12ஐ நிறைவுசெய்த 40 மாணவர்கள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே அழைத்து வரப்பட்டு, தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்விப்பிரிவுப் பொறுப்பாளர் ‘தமிழ்த்திறனாளன்’ திரு. இராஜ மனோகரன் அவர்களால் வாழ்த்தி மதிப்பளிக்கப்பட்டனர். மதிப்பளிப்புகளுக்கு மத்தியில் தமிழாலய மாணவர்களின் உரை, கவிதை, விடுதலைக் கானங்கள் மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகள் விழாவிற்குச் சிறப்புச் சேர்த்தன. தாயகத்தின் விடியலுக்கான பற்றுறுதியோடு 19:30 மணிக்கு அகவை நிறைவு விழாச் சிறப்புடன் நிறைவெய்தியது. தென்மாநிலத்துக்கான அகவை நிறைவு விழா 27.04.2024 சனிக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.