TBVWebLogo

பாட்சுவல்பாக் தமிழாலய மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி 2024

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கும் பாட்சுவல்பாக் தமிழாலயம் அயற் தமிழாலயங்களை இனணத்து, கோடைகால விடுமுறைக்கு முன்பாக ஆண்டுதோறும் மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டியை நடாத்தி வருகின்றது.

இவ்விளையாட்டுப்போட்டி ஊடாக மாணவர்களின் உடல், உள வளத்தை பேணுவது, மாணவர்களுக்கிடையேயான ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு,வெற்றி தோல்விகளை ஏற்கும் உயர்ந்த பண்பு போன்ற நற்பண்புகள் வளர்க்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இவ்வாண்டுக்கான விளையாட்டுப்போட்டி 23.06.2024 ஞாயிற்றுக்கிழமை கெசன் மாநிலத்தின் தலைநகரான வீஸ்பாடன் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. யேர்மனி நாட்டின் தேசியக்கொடி, தமிழீழத் தேசியக்கொடி மற்றும் பாட்சுவல்பாக் தமிழாலயக் கொடி என்பன ஏற்றிவைக்கப்பட்டது. தொடக்க நிகழ்வுகளுடன் தமிழாலய மாணவர்களின் அணிவகுப்பும் நடைபெற்றதைத் தொடர்ந்து போட்டிகள் தொடங்கியது. நடுவர்களாகத் தமிழாலயத்தின் இளைய ஆசிரியர்களும், அயற்தமிழாலய நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களும் பணியாற்றினார்கள்.

தமிழாலயங்களின் பெற்றோர், ஆசிரியர்கள். முன்னாள் மாணவர்கள் மற்றும் நகரத்தில் வாழும் தமிழ் உறவுகள் வருகைதந்து சிறப்பித்தனர். பாட்சுவல்பாக் தமிழாலயத்தின் மூத்தவர்களின் பட்டறிவுகளைப் பெற்று இளையவர்கள் போட்டிகளைத் திட்டமிட்டுச் சிறப்பாக நடாத்தியதைப் பார்த்தவர்கள் பாராட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மூன்று வயது நிரம்பிய மழலைகள் ஓடிய 25 மீற்றர் ஓட்டம், குழு நிகழ்வுகளான அஞ்சல் ஓட்டம், கயிறு இழுத்தல் என்பன பார்வையாளர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது மட்டுமல்லாமல் எமது இளைய தலைமுறை எமது தேசியத்தின் அடையாளங்களை மறக்காமல் குழுநிலைப் போட்டிகளுக்கு அவற்றின் பெயர்களைச் சூட்டி ஆர்வத்துடன் பங்கு பற்றியதைக் காணக்கூடியதாகவும் இருந்தது.

தொடர்ந்து போட்டிகளில் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற போட்டியாளர்களுக்குப் பதக்கங்களும் புள்ளிகளின் அடிப்படையில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிக்கிண்ணமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. நிறைவாகத் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் விளையாட்டுப்போட்டி நிறைவுபெற்றது.

error:
X