TBVWebLogo

தமிழாலயத் தொடக்க விழா – தமிழாலயம் பெலன்ஸ்பூர்க்

யேர்மனியின் பெரும்பாலான நகரங்களில் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்து ஒரே நிர்வாகத்தின் கீழ் கடந்த 34 ஆண்டுகளாகச் செம்மையுற நடாத்திவருகிறது தமிழ்க் கல்விக் கழகம். அந்தவரிசையில் யேர்மனியின் வடக்கு எல்லையில் டென்மார்க் நாட்டிற்கு அண்மையில் அமைந்துள்ள பெலன்ஸ்பூர்க் நகரில், புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சிறார்களின் நலன்கருதி, தனது 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களின் வரிசையில் பெலன்ஸ்பூர்க் தமிழாலயம் தொடங்கப்பட்டுள்ளது. 14.07.2024 ஞாயிற்றுக்கிழமை தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் ‘செம்மையாளன்’ திரு. செல்லையா லோகானந்தம் அவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் இத்தொடக்க விழாச் சிறப்புடன் நடைபெற்றது.

நிகழ்வுகளின் தொடக்கமாகத் தமிழாலய நிர்வாகி திருமதி பிரியரூபினி ராஜ்மோகன் அவர்களும் ஆசிரியர்கள் இருவரும் இணைந்து மங்கல விளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர். அகவணக்கம், தமிழாலய கீதத்தைத் தொடர்ந்து, தமிழ்க் கல்விக் கழகத்தின் வடமாநிலச் செயற்பாட்டாளர் ‘தமிழ் மாணி’ திருமதி சுபத்திரா யோகேந்திரன் அவர்களின் வரவேற்புரையும் இடம்பெற்றது. நிர்வாகி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான கருத்துரையாடலும் நடைபெற்றது. தமிழாலயத்தில் இணைந்து கொண்ட 20 மாணவர்களையும் நுழைவாயிலில் இருந்து மாலையணிவித்து அழைத்து வந்தமை விழாவிற்கு மேலும் சிறப்புச் சேர்த்தது. அன்றைய நாள் அவர்களுக்கான கற்பித்தல் 30 நிமிடங்கள் நடைபெற்றது. பெலன்ஸ்பூர்க் தமிழாலய மாணவர்களுக்கான வகுப்பறைக் கற்பித்தலானது வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் 15:00 மணி தொடக்கம் 18:00 மணிவரை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

error:
X