TBVWebLogo

தமிழாலயங்கள் கொண்டாடி மகிழ்ந்த வாணி விழாவும் ஏடுதொடக்குதலும்

கல்விக் கடவுளான கலைமகளைப் போற்றிக் கொண்டாடப்படும் வாணி விழாவின் சிறப்பு வழிபாடானது தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழியங்கிவரும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் பெரும்பாலான தமிழாலயங்களில் சிறப்புடன் நடைபெற்றது. நவராத்திரி விழாவின் பத்தாம் நாளான 12.10.2024 சனிக்கிழமை தமிழாலயங்கள் தமது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து இச்சிறப்பு வழிபாட்டைச் செய்தனர். கலைமகளுக்கு முக்கனிகளுடன் பொங்கல், அவல், சுண்டல், வடை, மோதகம் போன்ற பலவற்றைப் படைத்து வழிபட்டனர்.

இவ்விழாவின் சிறப்பு நிகழ்வான ஏடுதொடக்குதல் நிகழ்வும் தமிழாலயங்களில் மிகச் சிறப்புடன் நடைபெற்றது. தமிழாலயங்களின் மூத்த பட்டறிவு நிரம்பிய ஆசிரியர்கள், தமது மடியில் குழந்தைகளை இருத்தி, புதுநெல்மணியில் பிஞ்சுவிரல் பிடித்து, அகரம் எழுதி, குழந்தைகளின் கல்வி கற்றலின் தொடக்குகையைத் தொடக்கி வைத்தனர். கலைகளைக் கற்க விரும்பும் மாணவர்களுக்கு கலைகளைக் கற்பதற்கான தொடக்குகையைத் தமிழாலயங்களின் கலை ஆசான்கள் தொடக்கி வைத்தனர். மாணவர்களின் ஆடல் பாடல் இணைந்த கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு சிறக்கும் வகையில் கூடிக்குலாவிப் பகிர்ந்துண்டு மகிழ்ந்தனர் தமிழாலயக் குழுமத்தினர். வாணி விழாச் சிறப்பு வழிபாடு ஒரு சமயம் சார்ந்த விழாவாக இருந்தபோதிலும், மாணவர்களுக்கான கல்விச் சிறப்பு வளம்பெற வேண்டி வழிபடும் வழிபாடாக இவ்வழிபாடு அமைந்திருப்பதாலேயே, தமிழாலயங்கள் இவ்வாணி விழாவை ஆண்டுதோறும் சிறப்புடன் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

error:
X