தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழ்த்திறன் பிரிவால் ஆண்டுதோறும் தமிழாலய மாணவர்களிடையே நடாத்தப்பட்டுவரும் தமிழ்த்திறன் போட்டி தமிழாலயம், மாநிலம் மற்றும் யேர்மனி தழுவிய மட்டத்தில் என மூன்று நிலைகளில் நடாத்தப்பட்டு வருகின்றன. தமிழாலயங்கள் தமது மாணவர்களிடையே போட்டியை நடாத்தித் தெரிவுகளை அணியமாக்கித் தமிழ்த்திறன் பிரிவுக்கு வழங்கியதன் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான மாநில மட்டப் போட்டியானது இன்று (07.12.2024) கனோவர், கம், லிவகுசன், கிறீபெல்ட், லண்டவ் மற்றும் ஸ்ருற்காட் ஆகிய நகரங்களில் சிறப்பாக அமைக்கப்பட்ட ஆறு நிலையங்களில் நடைபெறுகின்றது.
ஆறு நிலையங்களிலும் 1139 போட்டியாளர்கள் 2765 போட்டிகளிற் கலந்துகொள்கின்றார்கள். ஒவ்வொரு நிலையத்திலும் நடைபெறும் ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று நிலைகளைப்பெறும் மாணவர்கள் 22.02.2025 சனிக்கிழமை நாடுதழுவிய மட்டத்தில் நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில் போட்டியிடவுள்ளனர்.
தமிழ்த்திறன் போட்டி நடைபெறும் ஆறு நிலையங களையும் இளையவர்கள் பொறுப்பேற்றுச் சிறப்பாக நடாத்துகின்றார்கள். கனோவர் நிலையத்தை செல்வி அபர்ணா சிவரூபன், கம் நிலையத்தை செல்வி கம்சிஜா அண்ணாத்துரை, லிவகுசன் நிலையத்தை செல்வி திருதிகா வவுனியார், கிறீபெல்ட் நிலையத்தை செல்வி மதுஷா றஞ்சித், லண்டவ் நிலையத்தை செல்வி டிலகஷி ரவி மற்றும் ஸ்ருற்காட் நிலையத்தை செல்வி காருண்யா நவராசா ஆகியோர் நெறிப்படுத்தியிருந்தனர். தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்வி மற்றும் தமிழ்த்திறன்பிரிவுப் பொறுப்பாளர் ‘தமிழ்த்திறனாளன்’ திரு. இராஜ மனோகரன், தமிழ்க் கல்விக் கழகத்தின் துணை மற்றும் தேர்வுப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. சேரன் யோகேந்திரன், பரப்புரைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. தீபன் தர்மலிங்கம், தமிழ்த்திறன்பிரிவுத் துணைப்பொறுப்பாளர் திருமதி சர்மிளா தர்சன், கல்விப்பிரிவுத் துணைப்பொறுப்பாளர் திரு. ராமேஸ் ஜெயக்குமார் மற்றும் வடமாநிலச் செயற்பாட்டாளர் திருமதி சுபத்திரா யோகேந்திரன் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கிப் போட்டிகளைத் தொடக்கி வைத்தனர். போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களை வாழ்த்தி, தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் ‘செம்மையாளன்’ திரு. செல்லையா லோகானந்தம் அவர்களின் சிறப்பு வாழ்த்துரையும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
2024ஆம் ஆண்டிற்கான மாநிலத் தமிழ்த்திறன் போட்டி தமிழுக்கும் தமிழர் தாயகத்திற்குமாகத் தம்முயிர் ஈர்ந்தோரை நினைவேந்திப் பொதுச்சுடரேற்றலோடு 09:30 மணிக்குத் தொடங்கிப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.