தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கும் நூற்றுக்கு மேற்பட்ட தமிழாலயங்களில் ஒன்றான லண்டவ் தமிழாலயத்தின் வெள்ளிவிழா, கடந்த 30.11.2024 சனிக்கிழமை காலை 09.15 மணிக்குத் தாயகம், மொழி, கலை, பண்பாடு என்பவற்றைக் காத்திடும் நோக்கத்தோடு பயணித்த மாவீரர்களையும் மக்களையும் நினைவேந்திப் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. பொதுச்சுடரினை கொண்ட்றாட் அடெனவர் றியால் புளுஸ் கல்லூரியின் அதிபர் திரு.மன்பெரட் ஸபோவ்ஷ்கி அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து சிறப்பு வருகையாளர்கள் தமிழினத்தின் பண்பாடு தழுவி, மண்டபத்தினுள் அழைத்து வரப்பட்டனர். அவர்களைத் தமிழாலயத்திலே கற்றுவரும் மூன்றாந்தலைமுறைக் குழந்தைகளான பேரக்குழந்தைகளும் இணைந்து வரவேற்றமை சிறப்பிற்குரியதாகும்.
றைன்லாண்ட் பாள்ஸ் மாநில அரசவை உறுப்பினர் திரு. புளொறியன் மையெர், சுட்லீஸவைன்ஸ்ராஸ மாவட்டசபை உறுப்பினர் திரு. டீற்மர் சீவெல்ற், லண்டவ் நகர குமுக மற்றும் கல்வி அதிகாரி லேனா டியுர்போல்ட், லண்டவ் நகரப் புலம்பெயர்ந்தோர் உள்ளக ஒருங்கிணைவு ஆலோசனைச் சபை உறுப்பினர் திரு. றிரின் வோங், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் ‘செம்மையாளன்’ திரு. செல்லையா லோகானந்தம், தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் ‘தமிழ் மாணி’ திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி, யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்புப் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் றைன்லாண்ட் மாநிலப் பொறுப்பாளர் திரு. சபாபதி விமலநாதன், முன்னாள் ஆசிரியரான செல்வன் குலேந்திரராசா ஆரூரன் ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றிவைக்க வெள்ளிவிழாத் தொடங்கியது.
அகவணக்கம், தமிழாலயப்பண் மற்றும் வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து தமிழாலய நிர்வாகி ‘தமிழ் வாரிதி’ திரு. கந்தசாமி குலேந்திரராசா அவர்களின் வரவேற்புரையுடன் அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. தமிழாலயத்தின் தூண்களாக விளங்கும் ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்புகளைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் ‘செம்மையாளன்’ திரு. செல்லையா லோகானந்தம் வாழ்த்தி வழங்கி வைத்தார். மேதகு 70 கட்டுரைப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற மாணவரை அரங்கிற்கு அழைத்துப் பாராட்டிமையும் சிறப்பு.
கலை நிகழ்வுகளோடு, சிறப்பு நிகழ்வாக வெள்ளிவிழாச் சிறப்பு மலரானது பெற்றோர்கள் குத்துவிளக்குகளால் ஒளியேற்றி வர, தமிழாலயத்தின் பெற்றோர் பிரதிநிதியும் அவரின் துணைவரும் இணைந்து அரங்கிற்கு எடுத்துவந்தனர். அம்மலரைத் தமிழாலய ஆசிரியர் ‘தமிழ் வாரிதி’ திருமதி தவநிதி நந்தகோபால் வெளியிட திரு. பசுவன் தேவராசா அவர்கள் பெற்றுக்கொண்டார். கலைப்பிரிவுப் பொறுப்பாளரால் வெளியீட்டுரையும், கலைப்பிரிவுப் பொறுப்பாளரின் வேண்டுகோளிற்கமையத் தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளரின் விதப்புரையும் இடம்பெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்தோருக்கான சிறப்பு மலரைத் தமிழாலய நிர்வாகி ‘தமிழ் வாரிதி’ திரு. கந்தசாமி குலேந்திரராசா அவர்கள் வழங்கினார்.
சிறப்புரையை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்களும் வாழ்த்துரைகளைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்வி மற்றும் தமிழ்த்திறன் பிரிவுப் பொறுப்பாளர் ‘தமிழ்த்திறனாளன்’ திரு. இராஜ. மனோகரன் அவர்களும், மத்தியமாநிலச் செயற்பாட்டாளர்களில் ஒருவரான ‘தமிழ் மாணி’ திரு. செல்லர் தெய்வேந்திரம் அவர்களும், முன்னாள் தேர்வுப்பிரிவுப் பொறுப்பாளர் ‘தமிழ் மாணி’ திருமதி தேவிமனோகரி தெய்வேந்திரம் அவர்களும் வழங்கியதோடு, தமிழ்க் கல்விக் கழகத்தின் மற்றைய பிரிவுசார் பொறுப்பாளர்கள், அவர்களின் துணைப் பொறுப்பாளர்கள், முன்னிலைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அயல் தமிழாலயங்களின் நிர்வாகிகள், ஆசிரியர்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
மாணவர்களின் சிறப்பான கலை வெளிப்பாடுகளாக வில்லிசை மற்றும் நாடகம் போன்றன அரங்கைத் தொடர்ந்தும் உற்சாகம் ஊட்டியதோடு, பார்வையாளர்களின் சிந்தனையைத் தூண்டக்கூடியதாகவும் அமைந்தன. நிறைவாகத் தமிழினத்தின் வரலாற்றுக் கடமையாகிய தாயகக் கனவினை ஒன்றிணைந்து வென்று நிமிர்வோம் என்ற உறுதிப்பாட்டோடு வெள்ளிவிழாச் சிறப்புடன் நிறைவுற்றது.