TBVWebLogo

தமிழர் கலைகளோடு களமாடும் வளரிளம் தமிழர்கள் – கிறீபெலட்

தமிழரது கலை வடிவங்களைத் தமிழினத்தின் இளைய தலைமுறை கற்றும் கண்டும் உணரவும், அதனூடாகப் படைப்பாக்கத் திறனைப் பெறவும், தமிழர் கலைகள் அழிந்துவிடாது காக்கவும் கலை அரங்காற்றுகை, செயலாக்கம் பெறுதல் வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மூன்றாந் தலைமுறைத் தமிழர்களும் தமிழர் கலைகளை அறிந்துகொள்ளவும் பயிலவும் களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கோடு, தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவு கலைத்திறன் போட்டியை நடாத்தி வருகிறது. இக்கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், காவடி, கரகம், பொய்க்காற்குதிரை, வில்லுப்பாட்டு போன்ற கிராமியக் கலைவடிவங்களுடன் பரதநாட்டியம் மற்றும் விடுதலை நடனம், விடுதலைப் பாடல், வாய்ப்பாட்டு ஆகிய ஒன்பது கலைகள் போட்டிகளாக நடைபெறுகின்றன. தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறியமைப்பில் மத்திய மாநிலத் தமிழாலயங்களுக்கான போட்டியரங்கம் கிறீபெல்ட் நகரிலே பொதுச்சுடர் ஏற்றலோடு தொடங்கியது.  

குளிர்காலத்தின் மென்குளிர் தழுவிச்செல்லும் காலைவேளையில் மண்டபத்தை நோக்கி உற்சாகமாகப் போட்டியாளர்கள் வருகை தந்த காட்சியும் ஒப்பனைக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மூன்றாந் தலைமுறைத் தமிழர்களான தமிழாலய மாணவர்கள் காவடிகள், கரகங்கள், பொய்க்காற் குதிரைகள், மயிற்றோகைகள், வில்லுகள், அணியிசைக் கருவிகள் என அணியமாகிய காட்சியும் தாயகமா அல்லது புலம்பெயர் நிலமா என்று சிந்திக்க வைத்தது.

கலைத்திறனோடு களமாடிய தமிழாலய மாணவர்கள் குழுநிகழ்வுகளுக்கு நிகராகத் தனியொருவராகப் பங்குபற்றும் வாய்ப்பாட்டு மற்றும் விடுதலைப்பாடல் போட்டிகளிலும் தனித் தன்மையை அரங்கிலே பதிவு செய்தனர். நாட்டார் பாடல், திருப்புகழ் மற்றும் விடுதலைப் பாடல்களை மனனம் செய்து பாடிப் பார்வையாளர்களைக் கவர்ந்துகொண்டனர்.

போட்டியரங்கிலே பங்கேற்புக்கான மதிப்பளிப்புகள் வழங்கப்பட்டதோடு, வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்புகளும் நடைபெற்ற அதேவேளை, மத்திய மாநிலத்திலே முறையே முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய கிறீபெல்ட், முன்சன்கிளட்பாக் மற்றும் வூப்பெற்றால் தமிழாலயங்களை அரங்கிற்கு அழைத்துப் பாராட்டிதழ் வழங்கப்பட்டது. இவர்களுக்கான சிறப்பு மதிப்பளிப்பு தமிழ்க் கல்விக் கழகத்தின் 35 அகவை நிறைவு விழா அரங்கிலே வழங்கப்படும். 

08.02.2025ஆம் நாளன்று மத்திய மாநிலத் தமிழாலயங்களுக்கான கலைத்திறன் போட்டி 08:30 மணிக்குப் பொதுச்சுடரேற்றலோடு தொடங்கி 20:00 மணிக்குத் தமிழரது நம்பிக்கையை ஓங்கி ஒலித்தவாறு நிறைவுற்றது. தமிழ்க் கல்விக் கழகத்தின் திட்டமிடலுக்கேற்ப ஐந்து மாநிலங்களில் வடமத்தி மற்றும் மத்திய மாநிலங்களின் போட்டிகள் நிறைவுற்றுள்ளன. தொடர்ந்து ஏனைய மூன்று மாநிலங்களுக்குமான போட்டிகள் நடைபெறவுள்ளது. வடமாநிலத் தமிழாலயங்களுக்கிடையே 15.02.2025ஆம் நாளன்று நடைபெறவிருந்த போட்டி 26.04.2025ஆம் நாளன்று நடைபெறும். அதேவேளை 22.02.2025ஆம் நாளன்று தென்மேற்கு மாநிலத் தமிழாலயங்களுக்கிடையேயான போட்டி லண்டவ் – எசிங்கன் நகரில் நடைபெறும்.

error:
X