தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாட்சுவல்பாக் தமிழாலயத்தின் முத்தகவை நிறைவு விழா 23.03.2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. காலை 10:00 மணிக்கு இனத்தையும் மொழியியையும் பண்பாட்டையும் காக்கும் நோக்கோடு பயணித்த மாவீரர்களையும் மக்களையும் நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. பொதுச்சுடரினை Rheingau-Taunus-Kreis அரச அவைத் தலைவர் திரு. சன்ரோ சேனர் அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் தமிழர் பண்பாடு தழுவி, வரவேற்புப் பாடலுடன் மண்டபத்தினுள் அழைத்து வரப்பட்டனர். அவர்களைத் தமிழாலய இளைய செயற்பாட்டாளர்களும் நிர்வாகத்தினரும் பெற்றோர்களும் அணிதிரண்டு சிறப்பாக வரவேற்றனர்.
முத்தகவை நிறைவு விழாவைத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு. செல்லையா லோகானந்தம், தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவு பொறுப்பாளர் “தமிழ்மாணி” திரு.மார்கண்டு பாஸ்கரமூர்த்தி, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ரைன்லான்ட் பால்ஸ் மாநிலப் பொறுப்பாளர் திரு. சபாபதி விமலநாதன், தமிழ்க் கல்விக் கழகத்தின் பரப்புரைப் பொறுப்பாளர் திரு. தீபன் தர்மலிங்கம், தமிழ்க் கல்விக் கழகத்தின் தேர்வுப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. சேரன் யோகேந்திரன், தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. ஜெனுசன் சந்திரபாலு, தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுத் துணைப் பொறுப்பாளர் முனைவர் திரு.விபிலன் சிவநேசன், தமிழ்க் கல்விக் கழகத்தின் தென்மேற்கு மாநிலக் கலைப்பிரிவுச் செயற்பாட்டாளர் திருமதி இராசராணி சிறி விக்னேஸ்வரமூர்த்தி மற்றும் பாட்சுவல்பாக் தமிழாலய நிர்வாகி திருமதி ரஜனி லிங்கதாசன் ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர். இவர்களுடன் தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னிலைச் செயற்பாட்டாளர்கள், அயல் தமிழாலயங்களின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
அகவணக்கம், தமிழாலயப்பண், வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து தமிழாலய நிர்வாகி திருமதி ரஜனி லிங்கதாசன் அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றது. கலைநிகழ்வுகளுடன் தமிழ்த்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அனைத்துலகப் பொதுத் தேர்வில் அதிதிறன் பெற்ற மாணவர்களுக்கும் ஆண்டு 12ஐ நிறைவு செய்த மாணவர்களுக்கும் மதிப்பளிப்புகள் இடம்பெற்றன.
தமிழாலயத்தில் உயர்ந்த பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மதிப்பளிப்பை தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு. செல்லையா லோகானந்தம் அவர்கள் வாழ்த்தி வழங்கி வைத்தார். நிர்வாகிக்கான மதிப்பளிப்பை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்களும் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளரும் இணைந்து, பெற்றோர்கள் ஆசிரியர்கள் முன்னிலையில் வாழ்த்தி வழங்கினார்கள். பெற்றோர்களும் நிர்வாகிக்கு வாழ்த்துப் பட்டயம் வழங்கிச் சிறப்பித்தனர். தமிழாலயத்தின் ஏனைய செயற்பாட்டாளர்கள் மற்றும் பெற்றோர் பிரதிநிதி ஆகியோருக்கு தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் தமிழ் மாணி திரு. மார்கண்டு பாஸ்கரமூர்த்தி மதிப்பளிப்பை வழங்கி வைத்தார்.
முத்தகவை விழாவின் சிறப்பு நிகழ்வாகத் தமிழாலயத்தின் முத்தகவை நிறைவு விழாச் சிறப்பு மலர் பெற்றோர்கள் குத்துவிளக்கு ஒளியேற்றி சிறப்புப் பாடல் இசையுடன் சூழ்ந்து வரத் தமிழாலயப் பெற்றோர் பிரதிநிதியும் அவர்களின் துணைவியாரும் அரங்கிற்கு எடுத்து வந்தனர். சிறப்பு மலரைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ்மாணி” திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்கள் வெளியிட்டு வைக்க, முதல் பிரதியைப் பெற்றோர்களில் ஒருவரான திரு. சுதாகர் திருக்காடுதுறை அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து கலைப்பிரிவுப் பொறுப்பாளரால் வெளியீட்டு உரை நிகழ்த்தப்பட்டது. செயற்பாட்டாளர்கள், பெற்றோர்கள் அனைவரும் அரங்கிற்கு வந்து சிறப்பு மலரைப் பெற்றுக் கொண்டனர். முத்து விழாச் சிறப்பு மலரில் யேர்மனிய மத்திய உள்துறை அமைச்சர், கெசன் மாநில துணை முதல்வர், கெசன் மாநில கல்வி அமைச்சர் மற்றும் மத்திய, மாநில அரச அவை அமைச்சர்களின் வாழ்த்துரைகள் இடம்பெற்றமை முத்துவிழா மலருக்குச் சிறப்பை வழங்கியுள்ளது.
சிறப்புரைகளை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்களூம், தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் செம்மையாளன் திரு. செல்லையா லோகானந்தம் அவர்களும் வழங்கினார்கள். நிறைவில் தமிழரின் தாயக உணர்வினைச் சுமந்த உறுதிப் பாடலுடன் முத்தகவை நிறைவு விழா சிறப்புடன் நிறைவுபெற்றது.