தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கும் நூற்றுக்கு மேற்பட்ட தமிழாலயங்களில் ஒன்றான முல்கைம் தமிழாலயத்தின் முத்தகவை நிறைவு விழா கடந்த 26.04.2025 சனிக்கிழமை காலை 10:00 மணிக்குத் தாயகம், மொழி, கலை, பண்பாடு என்பவற்றைக் காத்திடும் நோக்கத்தோடு பயணித்த மாவீரர்களையும் மக்களையும் நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. பொதுச்சுடரினை முல்கைம் தமிழாலய நிருவாகி திரு. பாலசிங்கம் ஜெயகுந்தன் அவர்கள் ஏற்றியதைத் தொடர்ந்து சிறப்பு வருகையாளர்கள் தமிழினத்தின் பண்பாடு தழுவி வரவேற்கப்பட்டனர்.
முல்கைம் மாநகரத் துணை முதல்வர் ஆன் கதரின் அலகொற்றே, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் ‘செம்மையாளன்’ திரு. செல்லையா லோகானந்தம், கலைப்பிரிவுப் பொறுப்பாளர் ‘தமிழ்மாணி’ திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி, பரப்புரைப் பிரிவுப் பொறுப்பாளர் திரு. தர்மலிங்கம் தீபன், நிருவாகப் பிரிவுப் பொறுப்பாளர் திரு. சந்திரபாலு ஜெனுசன், வடமத்திய மாநிலச் செயற்பாட்டாளர் ‘தமிழ்மாணி’ திரு. கந்தையா அம்பலவாணபிள்ளை, வடமத்திய மாநிலக் கலைப்பிரிவுச் செயற்பாட்டாளர் திருமதி சாரதா ராஜ்குமார் மற்றும் முல்கைம் தமிழாலய ஆசிரியை ‘தமிழ் மாணி’ திருமதி இராசலோசினி ஜெயகுந்தன் ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றிவைக்க முத்தகவை நிறைவு விழாவின் அரங்க நிகழ்வுகள் தொடங்கியது.
அகவணக்கம், தமிழாலயப்பண் மற்றும் வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து முல்கைம் தமிழாலய நிருவாகி திரு. பாலசிங்கம் ஜெயகுந்தன் அவர்களின் வரவேற்புரையுடன் முத்தமிழ் அரங்காகக் கலைநிகழ்வுகள் அணிசெய்தன. தமிழாலயத்தின் தூண்களாக விளங்கும் ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்புகளைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் ~செம்மையாளன்| திரு. செல்லையா லோகானந்தம் வாழ்த்தி வழங்கி வைத்தார்.
கலை நிகழ்வுகளோடு, சிறப்பு நிகழ்வாக முத்தகவை நிறைவு விழா மலர் வெளியீடும் இடம்பெற்றது. சிறப்புமலரைப் பெற்றோர்கள் குத்துவிளக்குகளால் ஒளியேற்றி வர, தமிழாலயத்தின் பெற்றோர் பிரதிநிதியும் அவரின் துணைவரும் இணைந்து அரங்கிற்கு எடுத்துவந்தனர். கலைப்பிரிவுப் பொறுப்பாளர் ‘தமிழ் மாணி’ திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்கள் வெளியிட்டு வைத்து, வெளியீட்டுரையாற்றினார். முதற்பிரதியை திரு. பாக்கியநாதர் பிரதீபன் அவர்கள் பெற்றுக்கொண்டார். சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்தோருக்கான சிறப்பு மலரைத் தமிழாலய நிருவாகி திரு. பாலசிங்கம் ஜெயகுந்தன் அவர்கள் வழங்கினார்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றது. தமிழ்க் கல்விக் கழகத்தின் பிரிவுசார் பொறுப்பாளர்கள், மாநிலச் செயற்பாட்டாளர்கள், அயல் தமிழாலயங்களின் நிர்வாகிகள், ஆசிரியர்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
மாணவர்களின் சிறப்பான கலை வெளிப்பாடுகள் முத்தமிழாய் செழித்த அரங்கில், நாடகம் பார்வையாளர்களின் கண்கள் பனிக்க நெஞ்சங்களைக் கரைத்துச் செல்லும் வகையில் அமைந்திருந்தது. சிறிய தொகையுடைய மாணவர்களோடு பெரும்விழாவாக அமைத்துச் சிறப்பித்தனர். கலை நிகழ்வுகளால் தொடர்ந்தும் உற்சாகம் ஊட்டியதோடு, பார்வையாளர்களின் சிந்தனையைத் தூண்டக்கூடியதாகவும் இருந்தன. நிறைவாகத் தமிழினத்தின் வரலாற்றுக் கடமையை ஒன்றிணைந்து வெற்றிகொள்ள உறுதிபூண்டவாறு, முத்தகவை நிறைவு விழாச் சிறப்புடன் நிறைவுற்றது.