மனிதகுலம் சிந்திக்கத் தொடங்கிய தொடக்க காலத்தில் கதிரவனைக் கடவுளாகக் கணித்தனர். காலையில் எழுந்து, மாலையில் மறைந்து மறுபடி வருவதும் வரும்போது சுடுவதும் மறையும்வேளை குளிர்வதும் மனித உணர்வுக்கு அவன் கடவுளாகத் தெரிந்தான். காலச்சுழற்சியில் மனிதகுலத்தின் சிந்தனை மேம்பட்டபோது கதிரவனின் செயல்தான் இயற்கையின் செயற்பாட்டுச் சுழற்சியில் பெரும் பங்கை வகிக்கின்றதென்பது உறுதியானது.
முகில்கள் உருவாகுவதும் காற்று, மழை வருவதும் நிலம் வளம்பெறுவதும் பயிர்கள் வளர்வதும் உணவுபெறுவதும் இப்படியாக அவனின் ஆதிக்கத்தால் நடக்கும் செயல்களாகும். இன்றைய மனிதன் எப்படியும் அழைக்கலாம் ஆனால் அன்றைய மனிதன் கடவுள் என்று அழைத்திருப்பது தவறில்லை.
அப்படியான இயற்கைப் பலம்மிக்க கடவுளுக்கு நன்றிகூறும் பண்பு தொடக்ககாலத்தில் பல்லின மக்களிடம் இருந்திருப்பினும் இன்று அது மருவி வருவது உண்மை.
தமிழர்களாகிய நாம் எந்தநிலை வரினும் இயற்கையை வணங்கிடும் எமது மூதாதையரின் வழி கட்டாயம் பின்பற்றிக் கதிரவனுக்கும் இயற்கைக்கும் நன்றி கூறும் நாளாகத் தைத்திங்கள் முதல் நாளைக் கொண்டாடி வருகின்றோம். தமிழீழ விடுதலைப்போரினால் புலம்பெயர்ந்து யேர்மனியில் வாழும் நாம், எமது பிள்ளைகளுக்குத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் சமகாலத்தில் எமது தொன்மைகளையும் கைமாற்றுச் செய்கின்றோம். அந்தவகையிலே இவ்வாண்டு நடைபெற்ற தைத்திங்கள் முதல்நாள் தமிழாலயங்களில் பொங்கலாகப் பொங்கியதும் அது தமிழரின் திருநாளாகப் புத்தாண்டாக மலர்ந்ததும் தொடர்ச்சியைப் பாதுகாப்பதில் தொன்மைக்குக் கிடைத்த வெற்றி என்பதில் நாமும் இணைந்து பெருமை கொள்வோம்.
தொடரும் படங்கள் கதைகளாகவும் சாட்சியங்களாகவும் விரிகின்றன…