TBVWebLogo

34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி

தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவுவிழா மத்திய மாநிலத்தில் 06.04.2024 அன்று தொடங்கி, வடமத்தி, வட மற்றும் தென்மேற்கு மாநிலங்களைத் தொடர்ந்து நிறைவாகத் தென்மாநிலத்தின் ஸ்ருற்காட் நகரில் 27.04.2024 சனிக்கிழமை சிறப்புடன் நிறைவுற்றுள்ளது. மாவீரர்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் தமிழ்ப்பற்றாளர்களையும் மற்றும் மக்களையும் நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டதையடுத்து, அன்னை பூபதியவர்களுக்கும் யேர்மனியிலே தேசிய மற்றும் தமிழ்ப்பணியோடு பயணித்த நாட்டுப்பற்றாளர்களினதும் திருவுருவப்படங்களுக்கான ஈகைச் சுடரேற்றப்பட்டு, மலர்மாலை அணிவித்து அகமேந்தியதைத் தொடர்ந்து அகவை நிறைவுவிழா மங்கல விளக்கேற்றலோடு தொடங்கியது.

சிறப்பு வருகையாளர்களாக வருகைதந்திருந்த யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், பசுமைக்கட்சியின் ஸ்ருற்காட் மாநகரசபை உறுப்பினர் திருமதி மரினா சில்வெறி, கிறித்துவ ஜனநாயகக் கட்சியின் ஸ்ருற்காட் இளையோர் அணித்தலைவர் திரு.லியோனாட் றெசிமண், ஸ்ருற்காட் சிறீ சித்திவிநாயகர் ஆலயப் பிரதமகுரு சிவசிறீ சிவகுமார் குருக்கள், யேர்மன் தமிழ்ப்பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநிலப் பொறுப்பாளர் திரு. கனகையா சிறீகாந்தன், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்சன் கோட்டப்பொறுப்பாளர் திரு. ஜெகநாதன் சுகுமார், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் நூர்ன்பேர்க் கோட்டப் பொறுப்பாளர் திரு. கந்தையா கிட்டிணபிள்ளை, யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் கேதீஸ்வரன் சயந்தன் மற்றும் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பின் துணைப் பொறுப்பாளர் செல்வி வானதி நிர்மலதாசன் ஆகியோரின் மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து அகவணக்கம், தமிழாலய கீதத்துடன் தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் ‘செம்மையாளன்’ திரு.செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையுடன் மதிப்பளிப்பு நிகழ்வுகள் தொடங்கின.

பொதுத்தேர்வு, தமிழ்த்திறன், கலைத்திறன் போன்றவற்றில் தமது செயல்திறன்களை வெளிப்படுத்தி வெற்றியை ஏற்றமாகப் பெற்றவர்களையும் அதனைப் பெறவைப்பதற்காக உழைக்கும் பணித்திறனாளர்களையும் மதிப்பளிக்கும் பெருவிழாவாக இவ்வகவை நிறைவு விழா தமிழ்க் கல்விக் கழகத்தால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணித்திறனாற்றிய ஆசான்கள், செயற்பாட்டாளர்களுக்கான மதிப்பளிப்புகளோடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ‘தமிழ் வாரிதி’ என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ‘தமிழ் மாணி’ என்றும்; 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கமும் வழங்கிப் பட்டமளிப்பும் நடைபெற்றது. முன்சன் தமிழாலயத்தின் நிர்வாகி ‘தமிழ் மாணி’ திரு. நாகராசா நிர்மலதாசன் 30 ஆண்டுகள் பணிநிறைவுக்கான மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டமை சிறப்பிற்குரியதாகும்.

தமிழ்த்திறன், கலைத்திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களின் செயல்திறன்களை ஒன்றிணைத்ததன் விளைச்சலால் தமிழாலயங்கள் பெற்ற புள்ளிகளினடிப்படையில் சிறந்த தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. தமிழ்த்திறன் போட்டியில் நாடுதழுவிய மட்டத்தில் முன்சன் தமிழாலயம் 1ஆம் நிலையையும் நூர்ன்பேர்க் தமிழாலயம் 2ஆம் நிலையையும் பெற்றுக்கொண்டன. தமிழ்த்திறன் போட்டியில் முதலாவது நிலையைத் தமதாக்கிய முன்சன் தமிழாலயம் மாமனிதர் இரா.நாகலிங்கம் ஐயா அவர்களின் நினைவாக வழங்கப்பட்டுவரும் மாமனிதர் இரா. நாகலிங்கம் விருதைக் கையேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாண்டிற்கான கலைத்திறன் போட்டியில் மாநிலப் மட்டத்தில் முன்சன், ரூட்லிங்கன், நூர்ன்பேர்க் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் பெற்றதன் அடிப்படையில் சிறப்பு மதிப்பளிப்புகள் வழங்கப்பட்டன.

தமிழாலயங்களில் மழலையராக இணைந்து ஆண்டு 12ஐ நிறைவுசெய்த 64 மாணவர்கள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே அழைத்துவரப்பட்டு, தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்விப்பிரிவுப் பொறுப்பாளர் ‘தமிழ்த்திறனாளன்’ திரு. இராஜ மனோகரன் அவர்களால் வாழ்த்தி மதிப்பளிக்கப்பட்டனர். மதிப்பளிப்புகளுக்கு மத்தியில் தமிழாலய மாணவர்களின் உரை, கவிதை, விடுதலைக் கானங்கள் மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகள் விழாவிற்குச் சிறப்புச் சேர்த்தன. தாயகத்தின் விடியலுக்கான பற்றுறுதியோடு 21:00 மணிக்கு அகவை நிறைவு விழா தென்மாநிலத் தமிழாலயங்களுக்கான அரங்குடன், தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறையின் திட்டமிடலுக்கேற்ப 34ஆவது அகவை நிறைவு விழா ஐந்து மாநிலங்களிலும் சிறப்புடன் நிறைவடைந்தது.

error:
X