TBVWebLogo

கலைப்பரிதியில் ஏறிவரும் வளரிளம் தமிழ்ப்பரிதிகளின் கலைக்களமாய் கலைத்திறன் – 2022

தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டியின் 2022ஆம் ஆண்டுக்கான போட்டியின் தொடராகத் தென்மாநிலத்துக்கான போட்டி கடந்த வாரம் 12.03.2022 ஸ்ருட்காட் நகரிலே நடைபெற்றதைத் தொடர்ந்து, 19.03.2022 அன்று மத்தி மற்றும் வடமத்திய மாநிலங்களுக்கான பகுதி இரண்டிற்கான போட்டியரங்கம் 08:30மணிக்கு மங்கல விளக்கேற்றல், அகவணக்கம், தமிழாலயகீதம் என்பவற்றைத் தொடர்ந்து தெரிவுசெய்யப்பட்ட கலைவடிவங்களுக்கான போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.

கோலாட்டப் போட்டியோடு தொடங்கி விடுதலைநடனப் போட்டியோடு நிறைவுற்ற கலைத்திறன் போட்டி, தொடங்கியதிலிருந்து நிறைவுவரை மண்டபம் நிறைந்த பார்வையாளர்களோடு வில்லிசை, நாடகம், காவடி கரகம் பொய்க்காற்குதிரை, விடுதலை நடனங்;களில் ஆண்,பெண்,நுண்கலை என ஆடற்கலை வடிவங்களோடு அரங்கு ஒன்றித்திருக்கப் போட்டிகள் விறுவிறுப்போடு அரங்காற்றியமை சிறப்பு. போட்டியிற் பங்கேற்ற ஒவ்வொரு மாணவருக்கும் பங்கேற்புக்கான மதிப்பளிப்பு வழங்கப்பட்டதோடு, நிறைவாக முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய தமிழாலயங்களுக்கான பாராட்டும் வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்பும் நடைபெற்றது. நடுவர்களுக்கான மதிப்பளிப்புடன் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் திரு. செல்லையா லோகானந்தம் அவர்களின் வாழ்த்துரையும் இடம்பெற்றது.நிறைவாகக் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்களின் நன்றியுரையை அடுத்து, தமிழினத்தின் நம்பிக்கையைப் பறைசாற்றிப் போட்டியரங்கம் விடைபெற்றது.

கலைத்திறன் போட்டி 2022இற்கான மத்திய மாநிலப்போட்டியிலே, முன்சன்கிளட்பாக் தமிழாலயம் முதலாம் இடத்தையும் நொய்ஸ் தமிழாலயம் இரண்டாம் இடத்தையும் வூப்பெற்றால் தமிழாலயம் மூன்றாம் இடத்தையும் தமதாக்கிக் கொள்ள, வடமத்திய மாநிலத்திலே, வாறன்டோர்வ் தமிழாலயம் முதலாம் இடத்தையும் எசன் தமிழாலயம் இரண்டாம் இடத்தையும் றைனே தமிழாலயம் மூன்றாம் இடத்தையும் தமதாக்கிக் கொண்டன. அதேவேளை, புள்ளிகளின் அடிப்படையில் யேர்மன் தழுவிய மட்டத்தில் ஸ்ருட்காட் தமிழாலயம் முதலாம் இடத்தையும் பாட்சுவல்பாக் தமிழாலயம் இரண்டாம் இடத்தையும் வாறன்டோர்வ் தமிழாலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. மாநில மட்டத்திலும், யேர்மன் தழுவிய மட்டத்திலும் முதல் மூன்று நிலைகளைப்பெற்ற தமிழாலயங்களுக்கும், எமது 32ஆவது அகவை நிறைவு விழா அரங்கிற் சிறப்பாக மதிப்பளிக்கப்படும். வடமாநிலத் தமிழாலயங்கள் தொற்றுநோய்ப் பரவலச்சம் கரணியமாகப் பங்குபற்றாமையினாற் போட்டி நடைபெறவில்லை. போட்டியிற் பங்குபற்றிய, பாராட்டி மகிழ்ந்த தமிழாலயங்களின் பெற்றோர், ஆசிரியர்கள், நிர்வாகக் குழுவினர் என அனைவரதும் கூட்டு முயற்சியைப் பாராட்டுவதோடு, வாழ்த்துகின்றோம்.

error:
X