TBVWebLogo

தமிழர் திருநாளோடு தமிழாலயங்கள்

கார் தந்த வளம்கொண்டு களம் சென்ற உழவனது, தோள் கொண்ட வலிமையினால், வயல்களெல்லாம் பொன்மலர்கள் தூவிடுமே. நீர் மொண்ட நிலம்மீது பொற்கதிர் பரப்பிச் சமன்செய்து விளைச்சல் தரும் வெய்யோனின் செங்கதிரேந்தி சிரந்தாழ்த்தித் தமிழரெல்லாம் நன்றி சொல்வர். தை அவளை வரவேற்கத் தமிழர் மனமெங்கும் மகிழ்வு பொங்கும். பழையன கழித்துப் புதியன பூண்டிடுவர். ஆதிமுதற் சோதியன் அரங்குவரும் முன்னாலே, முற்றம் பெருக்கிச் சாணியினால் மெழுகிடுவர். மாக்கோலம் போட்டு நிறைகுடம் வைத்தே மங்கலம் பொங்கிடவே சுடரேற்றிடுவர். மாவிலையும் மஞ்சள் இலையும் புது மண்பானையிலே கட்டி, நீர்நிறைத்து அடுப்பினிலேற்றி பொங்கலிடும் அழகோடு, தமிழர் புத்தாண்டு பொலிவுபெறும்.

சிவப்பரிசி பயற்றோடு, பாகும் பாலும் கொண்டு பொங்கல் ஒருபுறமாய், கூலங்கள் தானெடுத்து மோதகம், வெண்றொட்டி, முறுக்கோடு முக்கனியும் கற்கண்டும் கரும்புமாய் அணியமாகும். பொங்கல் பொங்கிச் சரிகையிலே பகலவனைக் கரங்கூப்பி வணங்குவதும், ‘பொங்கலோ பொங்கல்’ என்று குரலெழுப்பி மகிழ்வோடு கொண்டாட, மத்தாப்பும் பட்டாசும் வெடித்திடவே உற்சாகம் பொங்கிவரும். வீடுபொங்க, ஊர்பொங்க, நாடு பொங்க, தமிழர் வாழும் உலகெங்கும் இன்று பொங்கல் பொங்கிவரக் காண்கின்றோம்.


யேர்மனியிலும் தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் 72 தமிழாலயங்கள் இன்று காலை கடுமையான பனி, மழைக் குளிரிலும் தமிழ்ப்பள்ளிகளின் முற்றத்தின் பெற்றோர், ஆசிரியர் மாணவர்கள் இணைந்து பொங்கி இயற்கைக்கு படைத்து நன்றி கூறி மகிழ்ந்தன. மேற்படி விழாவில் 4000க்கு மேற்பட்டோர் பங்குகொன்றது சிறப்புமிக்க விடையமாகும். ஏனைய தகவலுக்கு பொங்கல்படங்கள் சாட்சியாகும்.

 
 
error:
X