TBVWebLogo

33ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி (தென்மேற்கு மாநிலம்)

யேர்மனியின் பரந்துள்ள நகரங்களில் தமது வாழ்வை அமைத்துக்கொண்ட புலம்பெயர் தமிழர்களின் பிள்ளைகளை ஒன்றிணைத்து, அப்பிள்ளைகளைத் தாய்மொழியோடு கலை, பண்பாடு மற்றும் விளையாட்டு எனப் பன்முகத்துறைகளில் வளர்த்தெடுப்பதுடன், அவர்களை ஒழுக்கத்திலும் பண்பிலும் சிறந்தவர்களாக உருவாக்கும் பெரும்பணியைச் செவ்வனவே ஆற்றிவருகின்றது தமிழ்க் கல்விக் கழகம். யேர்மனியில் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்களை உருவாக்கி, அவற்றின் ஒருங்கிணைப்பு நடுவமாகச் செயலாற்றிவரும் தமிழ்க் கல்விக் கழகம், இவ்வாண்டு தனது வரலாற்றின் வழித்தடங்களில் 33ஆண்டுகளின் நிறைவைக் கொண்டாடி வருகின்றது. இவ்வகவை நிறைவு விழா நான்கு மாநிலங்களில் சிறப்புடன் நிறைவுற்ற நிலையில், தென்மேற்கு மாநிலத்தில் இறுதி அகவை நிறைவு விழா 30.04.2023 ஞாயிற்றுக்கிழமை ஓவன்பக் (லண்டோவ்) நகரில் நடைபெற்றது.
சிறப்புவிருந்தினர்களாக யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறீரவீந்திரநாதன் அவர்களும் யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநிலப் பொறுப்பாளர்களும் மற்றும் துணை அமைப்புகளின் பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
காலை 09:00 மணிக்குச் சிறப்பு விருந்தினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அரங்கிற்குள் அழைத்து வரப்பட்டு, தமிழீழ தேசத்தின் விடியலுக்காய் உண்ணாவிரதமிருந்து உயிர்த்தியாகம் செய்த தியாகதீபம் அன்னை பூபதி அம்மாவிற்குச் சுடர் மற்றும் மலர் வணக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மங்கல விளக்கேற்றல், அகவணக்கத்தோடு அகவை நிறைவு விழா தொடங்கியது. தமிழ்க் கல்விக் கழகத்தின் செயற்பாட்டாளர்களும் மாநில மட்டத்திலான இளையோரின் பங்கேற்பும் ஒன்றாக இணைந்து விழாவைச் செம்மைப்படுத்தின. தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு. செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையுடன் மதிப்பளிப்பு நிகழ்வுகள் தொடங்கின.

பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் போன்றவற்றில் தமிழாலய மாணவர்கள் பெற்றுக்கொண்ட திறன்களுக்கான மதிப்பளிப்புகள் சிறப்புடன் அமைய, அம்மதிப்பளிப்புகளுடன் இணைந்து வெற்றிபெற்ற மாணவர்களின் திறன்களை ஒன்றிணைத்ததன் பயனாகத் தமிழாலயங்கள் பெற்றுக் கொண்ட வெற்றிகளுக்கான மதிப்பளிப்புகளும் வழங்கப்பட்டன. தமிழாலய நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றிணைந்து ஓராண்டு உழைத்ததன் அறுவடையாகக் கலைத்திறன் போட்டியில் தமிழாலயங்கள் பெற்ற வெற்றிகளை அரங்கில் கொண்டாடி மகிழ்ந்தனர். தென்மேற்கு மாநிலத்தின் கலைத்திறன் போட்டியில் மாநில மட்டத்தில் முதலாம் நிலையை பிராங்பேட் தமிழாலயமும் இரண்டாம் நிலைகளை பாட்சுவல்பாக் சார்புறுக்கன் தமிழாலயங்களும் மூன்றாம் நிலையை லண்டோவ் தமிழாலயமும் பெற்றதுடன், நாடுதழுவிய மட்டத்திலான கலைத்திறன் போட்டியில் முதல் நிலையை பிராங்போட் தமிழாலயமும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
தாய்த்தமிழை வளர்க்கும் தூயபணியில் தமிழாலயங்களில் இணைந்து பணியாற்றிவரும் ஆசிரியப் பெருந்தகைகளினதும் செயற்பாட்டாளர்களினதும் பணித்திறன்களைப் போற்றும் வகையில் 5,10,15 ஆண்டுகள் பணிநிறைவிற்கான மதிப்பளிப்பும், 20ஆண்டுகள் பணித்திறனாற்றியவர்களுக்கு „தமிழ் வாரிதி“ என்றும் 25 ஆண்டுகள் பணித்திறனாற்றியவர்களுக்கு „தமிழ் மாணி“ என்றும் பட்டமளித்துப் பாராட்டப்பட்டமை சிறப்புக்குள் சிறப்பானது. இவர்களைத் தாண்டி 30 ஆண்டுகள் பணித்திறனாற்றிய திறனாளர்களுக்குத் தமிழ்க் கல்விக் கழகத்தின் உயர்விருதான முப்பது ஆண்டுகளைச் சுட்டும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கத்தை அப்பணியாளர்களின் நெஞ்சோடு பதித்து அவர்கள் ஆற்றிய பணியின் சிறப்பு வரலாற்றில் பதிவாக்கப்பட்டது. இம்மதிப்பளிப்பை கொம்பூர்க், சுல்ஸ்பாக் தமிழாலயங்களில் 30 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய „தமிழ் மாணி“ திருமதி பூரணம் வேலாயுதம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
பன்மொழிச் சூழலுள் வாழும் தமது பிள்ளைகளைத் தமிழோடு இணைத்துப் பயணிக்க வைத்திருக்கும் தமிழ்ப் பெற்றோரது அயராத உழைப்பும் ஆசான்களின் ஒருங்கிணைந்த முயற்சியின் பயனாக ஆண்டு 12வரை தமிழாலயங்களில் கற்றலை நிறைவு செய்தோருக்கான மதிப்பளிப்பு, தமிழ்க் கல்விக் கழகத்தின் மற்றொரு பரிமாணமாய் விளங்கியது.
மதிப்பளிப்பு நிகழ்வுகளின் இடையிடையே தமிழாலயங்களின் மாணவர்கள் வழங்கிய கலைநிகழ்வுகள் அகவை நிறைவு விழாவை மேலும் மெருகூட்டியது. இந்நிகழ்வுகளில் காவடி, கரகம், பொய்க்காற் குதிரை நடனம் தாயகத்தில் ஆடப்படும் ஆடலுக்கு நிகராக எமது மாணவர்கள் ஆடியமை சிறப்பு.
நிறைவாக விழாவைச் சிறப்பாக நடாத்திய மாநில மட்டத்திலான இளையோருக்கான மதிப்பளிப்போடு, நன்றியுரையைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் என்ற நம்பிக்கையோடு தென்மேற்கு மாநிலத்துக்கான அகவை நிறைவு விழாவுடன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 33ஆவது அகவை நிறைவு விழா இனிதே நிறைவுற்றது.

error:
X