தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழியங்கிவரும் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்கள் தமது நகரங்களில் வாழ்ந்துவரும் தமிழ்ச் சிறார்களை ஒன்றிணைத்துத் தாய்மொழியையும் கலை, பண்பாட்டு மரபுகளையும் கற்பிக்கும் உயரிய சிந்தனையை இலக்காகக் கொண்டு தமது பணியைச் செவ்வனவே செய்துவருகின்றன. அந்தவழியில் கடந்த 30 ஆண்டுகளாக செயல்திறனாற்றிவரும் நூறன்பேர்க் தமிழாலயம், தனது முத்தகவை நிறைவு விழாவை 22.07.2023 சனிக்கிழமை பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், நிர்வாகத்தினர் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்களும் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருந்த Bauer Micheila Vorstand Nachbarschfthaus Nürnberg, Rolf Engelmann Beiratvorsitzender Nachbarschafthaus Nürnberg, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு.யோன்பிள்ளை சிறீரவீந்திரநாதன் அவர்களும் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் செம்மையாளன் திரு.செல்லையா லோகானந்தம் அவர்களும் தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்வி மற்றும் தமிழ்த்திறன் பிரிவுப் பொறுப்பாளர் திரு.இராஜதுரை மனோகரன், தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு.மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி, தமிழ்க் கல்விக் கழகத்தின் வெளிச்சவீடு செயல்திறன் தொகுப்புப் பொறுப்பாளர் திரு. தர்மலிங்கம் தீபன், தமிழ்க் கல்விக் கழகத்தின் தென்மாநிலச் செயற்பாட்டாளர் திருமதி பிரமிளா சுரேஸ்குமார், தமிழ்க் கல்விக் கழகத்தின் தென்மாநிலக் கலைப்பிரிவின் செயற்பாட்டாளர் திருமதி பகீரதி ஆனந்தசிங்கம், யேர்மன் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன் அவர்களும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
தொடக்க நிகழ்வுகளைத் தொடர்ந்து, ஆசிரியர்கள், மாணவர்களுக்கான மதிப்பளிப்புகளும் சிறப்பு விருந்தினர்களின் வாழ்த்துரைகளுக்குமிடையே நூறன்பேர்க் தமிழாலய மாணவர்களின் கலை நிகழ்வுகள் விழாவை மேலும் சிறப்பூட்டியது. நூறன்பேர்க் தமிழாலயம் கடந்த 30 ஆண்டுகள் செய்த பணியின் சிறப்பைத் தாங்கிய மலர், பெற்றோர்கள் புடைசூழ அரங்கினுள் வருகை கொண்ட காட்சி காண்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. முத்துவிழா மலரின் முதற்படியைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்கள் வெளியிட்டு வைக்க, தமிழாலயத்தின் முன்னாள் முதல் நிர்வாகி திரு. பொன்னம்பலம் இராஜகுணசிங்கம் அவர்கள் பெற்றுக்கொண்டார். நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற உறுதியேற்புடன் நூறன்பேர்க் தமிழாலயத்தின் முத்தகவை விழாச் சிறப்புற நிறைவெய்தியது.