TBVWebLogo

புலத்திலே தமிழர் கலைகளைப் பதியமிடும் இளையோரின் பாய்ச்சல்

காலைமுதல் தமிழாலய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களெனக் கலைத்திறன் போட்டி நடாத்தபட்ட மண்டபத்தை நோக்கிக் காவடி, கரகம், பொய்க்காற்குதிரை மற்றும் அரங்கப்பொருட்களென உற்சாகத்தோடு வருகை தந்தகாட்சி தாயகத்தில் நிற்பது போன்றதொரு நினைவைத் தொட்டு நின்றது. 10.02.2024ஆம் நாள் ஒருபுறம் தமிழ்க் கல்விக் கழகத்தினர் போட்டி முன்னாயத்தப் பணிகளோடும் மறுபுறம் தமிழாலயங்கள் பங்கேற்கும் ஆர்வத்தோடும் ஒன்றித்து அணியமாகிட, 09:30 மணிக்குப் பொதுச்சுடர் ஏற்றலோடு தென்மேற்கு மாநிலத் தமிழாலயங்களிடையேயான கலைத்திறன் போட்டி தொடங்கியது.

மங்கலவிளக்கேற்றல், அகவணக்கம், தமிழாலயகீதம் மற்றும் வரவேற்புரை என்று தொடர்ந்த தொடக்க நிகழ்வுகள் நிறைவுறப் போட்டிகள் தொடங்கியது. தமிழர் கலைகளில் தேர்வு செய்யப்பட்ட கலைகளோடு மாணவர்கள் போட்டிகளிற் பங்குபற்றித் தமது கலைத்திறனை வெளிப்படுத்தியமை சிறப்பு. குழுநிலைப் போட்டிகள், தனியொருவருக்கான பாடற்போட்டிகள் எனத் திட்டமிட்டவாறு இரு அரங்குகளிற் சிறப்பாக நடைபெற்ற போட்டிகளிற் பங்கேற்றமைக்காக ஒவ்வொரு அரங்காற்றுகை நிறைவிலும் மாணவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். மண்டபம் நிறைந்த பார்வையாளர்களோடு தொடர்ந்த போட்டிகளில் எம் தானைத் தலைவனின் புகழ்கூறும் நடனங்களின்போது கரவொலியெழுப்பி உற்சாகம் கரைபுரண்டோடியமையானது, தமிழ் உறவுகள் தாயகன் மீது கொண்டிருக்கும் பாசத்தின் வெளிப்பாட்டையும் பிரதிபலித்தது. தமிழ்க் கல்விக் கழகத்தால் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டியிலே பெற்றோர்கள் மற்றும் மாணவர்களது ஈடுபாடும் அவர்களை நெறிப்படுத்திவரும் நிர்வாகத்தினர், ஆசிரியர்களோடு ஆங்காங்கே இலைமறைகாயாகத் தமிழாலயப் பெற்றோரிடையே இருக்கும் கலை வளவாளர்களென அனைவரினதும் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியின் பயனாகத் தமிழாலய மாணவர்களிடையே உள்ள வளரிளம் தமிழர்கள் கற்றலுக்கப்பாலான கலைவெளிப்பாடுகளின் வழியாகவும் தமிழைக் கற்பதற்கானதொரு களமாகவும் கலைத்திறன் இருப்பதை அரங்கம் வந்த நாடகப்போட்டி பதிவுசெய்தது. போட்டிகளில் முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்பும் இடம்பெற்றது.

தென்மேற்கு மாநிலத் தமிழாலயங்களிடையேயான போட்டிகளிற் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று நிலைகளையும் முறையே தமிழாலயம் பிராங்பேர்ட், தமிழாலயம் கால்ஸ்றூகே மற்றும் தமிழாலயம் லண்டவ் ஆகியன பெற்றுக்கொண்டன. அவர்களை அரங்கிற்கு அழைத்துப் பாராட்டி வாழ்த்தப்பட்டதோடு, அவர்களுக்கான சிறப்பு மதிப்பளிப்பு தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவு விழா அரங்கில் வழங்கப்படவுள்ளது. நிறைவாகத் தாயக விடியல் மீதான பற்றுறுதியுடனான நம்பிக்கையைத் தொட்டவாறு கலைத்திறன் போட்டி சிறப்பாக நிறைவுற்றது.

தென் மற்றும் தென்மேற்கு மாநிலப் போட்டிகளைத் தொடர்ந்து 17.02.2024ஆம் நாளன்று மத்திய மாநிலப் போட்டி கிறேபெல்ட் நகரிலும் 24.02.2024ஆம் நாளன்று வடமத்திய மாநிலப் போட்டி கற்றிங்கன் நகரில் நடைபெற்று, நிறைவாக 25.02.2024ஆம் நாளன்று வடமாநிலப் போட்டி கனோவர் நகரிலும் நடாத்தப்படவுள்ளது. மேலதிக விவரங்களைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் இணையத்தளமான www.tbvgermany.com பார்த்தும் அறிந்துகொள்ளலாம்.

error:
X