TBVWebLogo

சிகரம் தொட்ட தமிழ்த்திறன் போட்டியின் முத்தகவை நிறைவு

1993ஆம் ஆண்டு மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களினால் வித்திடப்பட்ட தமிழ்த்திறன் போட்டி, தமிழ்க் கல்விக் கழகத்தின்; வரலாற்றுத் தடங்களில் தனக்கெனத் தனிச்சிறப்புடன் வெற்றி நடைபோட்டு வருகிறது. தமிழாலயங்களில் தமிழ் பயின்றுவரும் மாணவர்களில் மொழித்திறனாளர்கள், உரையாற்றளாளர்கள், கட்டுரைத்திறனாளிகள், வரைஞர்கள் போன்ற வளமிக்க ஆற்றலாளர்களைக் கண்டறிவதும் அவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்குவதும் தமிழ்த்திறன் போட்டியின் இலக்காகக் கொண்டு ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவருகிறது.

இப்போட்டியில் தமிழாலயம், மாநிலம் ஆகிய இரு மட்டங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற போட்டியாளர்கள், நிறைவாக நாடுதழுவிய மட்டத்தில் நடாத்தப்படும் போட்டிகளில் போட்டியிட்டே தமது வெற்றியை உறுதிசெய்து கொள்ளமுடியும். இன்றைய தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டிய பெருமையும் செழுமையும் நிறைந்த சங்க இலக்கிய நூல்களான ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நறுந்தொகை, திருக்குறள் போன்றவற்றில் மனனப் போட்டியும் வாசிப்பு, உரையாற்றல், கவிதை என்பவற்றுடன் உறுப்பமைய எழுதுதல், சொல்வதெழுதுதல், கட்டுரை போன்ற எழுதுதல் போட்டிகளுடன் ஓவியப் போட்டியும் நடாத்தப்பட்டு வருகிறது.

2023ஆம் ஆண்டின் தமிழ்த்திறன் இறுதிப் போட்டியும் அதன் முத்தகவை நிறைவு விழாவும் 02.03.2024 சனிக்கிழமை முன்சன்கிளாட்பாக் நகரில் மிகச்சிறப்புடன் நடைபெற்று நிறைவெய்தியது. காலை 08:00 மணிக்குத் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயற்பாட்டாளர்கள், மற்றும் தாயமைப்பினரும் இணைந்திருக்க, அவர்களுடன் தமிழாலயங்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் போட்டியாளர்களும் இணைந்து கொண்டனர். 09:00 மணிக்குத் தேசத்தின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கான பொதுச் சுடரேற்றலுடன் மங்கல விளக்கேற்றல், அகவணக்கம், தமிழாலயகீதம் எனத் தொடர்ந்த தொடக்க நிகழ்வுகளுடன் தமிழ்க் கல்விக் கழகத்தின்; தமிழ்த்திறன் பிரிவுப் பொறுப்பாளர் திரு. இராஜதுரை மனோகரன் அவர்களின் தொடக்க உரையும் இடம்பெற்றது. தமிழ்த்திறன் பிரிவுத் துணைப் பொறுப்பாளர் திருமதி சர்மிளா தர்சன் அவர்களால் தமிழ்த்திறன் போட்டியின் அறிக்கை வாசிக்கப்பட்டது. தொடர்ந்து யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்; பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறீரவீந்திரநாதன் அவர்களின் வாழ்த்துரையும் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு. செல்லையா லோகானந்தம் அவர்களின் வாழ்த்துரையும் இடம்பெற்றன.

கடந்த 30 ஆண்டுகள் தமிழ்த்திறன் போட்டிக்காக நேரம் காலம் பாராது உழைத்துவரும் அதன் பொறுப்பாளர் திரு. இராஜதுரை மனோகரன் அவர்களின் பணிச்சிறப்பைப் பாராட்டி, சிறப்பு மதிப்பளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. தமிழ்த்திறன் பிரிவினரின் போட்டிவிதிகளுக்கமைய, போட்டிகளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட 17 அறைகளில் தமிழ்க் கல்விக் கழகத்தின் 50க்கு மேற்பட்ட இளைய செயற்பாட்டாளர்களின் நெறிப்படுத்தலுடன் 11:30 மணிக்குத் தொடங்கிய போட்டிகள் 18:00 மணிக்கு நிறைவுபெற்றன.

66 தமிழாலயங்களிலிருந்து 350க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் 41 போட்டிகளில் பங்கேற்றனர். நடைபெற்ற இப்போட்டிகளைத் தமிழ்த்திறன் பிரிவால் தெரிந்தெடுக்கப்பட்ட 56க்கு மேற்பட்ட பட்டறிவுமிக்க ஆசான்களும் இளைய ஆசிரியர்களும் இணைந்து, தாம் ஏற்றுக் கொண்ட
பணியைச் செம்மையாக நிறைவேற்றியுள்ளனர்.

இரு நிலைகளில் வெற்றிபெற்றதன் தொடராக, இறுதிப் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்களுக்குப் பங்கேற்புப் பதக்கமும் சான்றிதழும் வழங்கித் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயற்பாட்டாளர்களால் மதிப்பளிக்கப்பட்டன. இறுதிப் போட்டியில் முதல் மூன்று நிலைகளைப்பெற்று வாகைசூடியவர்களுக்கும் புள்ளிகளினடிப்படையில் நாடுதழுவிய மட்டத்தில் வாகைசூடிய முதல் மூன்று தமிழாலயங்களுக்கும் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் 34ஆவது அகவை நிறைவு விழா அரங்குகளில் மதிப்பளிப்புகள் வழங்கப்படவுள்ளன என்பது சிறப்பிற்குரியதாகும்.

error:
X