TBVWebLogo

34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்

தமிழினம் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் சூழலில், தமது அடையாளத்தை அடுத்த தலைமுறை தொலைத்துவிடாதிருக்க தாய்மொழியைக் கற்பித்தல் அவசியம் என்ற உயர்சிந்தனையின் விளைவாகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. யேர்மனியிலும் தமிழ்க் கல்விக் கழகம் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துத் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் 34 ஆண்டுகளைத் தொட்டுநிற்கிறது.

அதன் ஆண்டுச் செயற்பாட்டு நிரலின் அறுவடையாக ஆண்டுதோறும் அகவை நிறiவு விழாவை முன்னெடுத்துவருகிறது. இந்த ஆண்டும் தனது நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப வகுக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களிலும் அகவை நிறைவு விழாவைக் கொண்டாடவுள்ளது. முதலாவதாக மத்திய மாநிலத்தின் நெற்றெற்றால் அரங்கிலே தனது 34ஆவது அகவை நிறைவு விழாவை 06.04.2024 சனிக்கிழமை கொண்டாடியது. பொதுச்சுடரேற்றலோடு தொடங்கி, அமைதிப்படையென வந்து ஆக்கிரமிப்புப் படையாகத் தாயகத்திலே சொல்லொணா அவலங்களைத் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட அந்நியப் படைக்கெதிராக அறப்போர் புரிந்து வீரகாவியமாகி நாட்டுப்பற்றின் குறியீடாகத் திகழும் ‘நாட்டுப்பற்றாளர்’ அன்னை பூபதி அவர்களுக்குச் சுடரேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து, அகவை நிறைவு விழா மங்கல விளக்கேற்றலோடு தொடங்கியது.

சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்த கால்டன்கிற்சன் நகரசபைத் தலைவர் திருமதி கிளவ்டியா வில்லெற்ஸ், கொனிக்ஸ்பாக் தொடக்கப்பள்ளியின் மேலாளர் திருமதி ஈவா கபெங்ஸ்ட், கால்டன்கிற்சன் சிறுவர் பூங்கா மேலாளர் திருமதி பேற்றா கவுசர், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு.தர்மலிங்கம் இராஜகுமாரன், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் நிர்வாகப் பொறுப்பாளர் ‘தமிழ் மாணி’ திருமதி கலா ஜெயரட்ணம், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மத்திய மாநிலப் பொறுப்பாளர் திரு. சின்னையா நாகேஸ்வரன், தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னாள் தேர்வுப்பிரிவுப் பொறுப்பாளர் ‘தமிழ் மாணி’ திருமதி தேவிமனோகரி தெய்வேந்திரம், முன்சன்கிளாட்பாக் தமிழாலய நிர்வாகி திரு.கிமேஸ் ஹரிஹரசர்மா மற்றும் யேர்மன் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் கேதீஸ்வரன் சயந்தன் ஆகியோர் மங்கலவிளக்கேற்றி வைக்க, அகவை நிறைவு விழாத் தொடங்கியது.

தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் ‘செம்மையாளன்’ திரு.செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, மதிப்பளிப்புகள் தொடங்கின. அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் ஆகியவற்றில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணியாற்றிய ஆசான்களுக்கான மதிப்பளிப்போடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ‘தமிழ் வாரிதி’ என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ‘தமிழ் மாணி’ என்றும்; 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கமும் வழங்கிப் பட்டமளிப்பும் நடைபெற்றது.

கும்மர்ஸ்பாக் தமிழாலயத்தின் ஆசிரியை ‘தமிழ் மாணி’ திருமதி நிர்மலாதேவி பாலச்சந்திரன் அவர்கள் 30 ஆண்டுகள் பணிநிறைவுக்கான மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பொதுத்தேர்வு, தமிழ்த்திறன், கலைத்திறன் போன்றவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களின் செயல்திறன்களை ஒன்றிணைத்ததன் விளைச்சலால் தமிழாலயங்கள் பெற்ற புள்ளிகளினடிப்படையில் சிறந்த தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. நாடுதழுவிய மட்டத்தில் அனைத்துலகப் பொதுத்தேர்வில் காகன், முன்சன்கிளாட்பாக், நொய்ஸ் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் தமிழ்த்திறன் போட்டியில் காகன் தமிழாலயம் 2ஆம் நிலையையும் கலைத்திறன் போட்டியில் கிறீபெல்ட் தமிழாலயம் 3ஆம் நிலையையும் கலைத்திறன் மாநிலப் போட்டியில் கிறீபெல்ட், முன்சன்கிளாட்பாக், நொய்ஸ் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் பெற்றுக்கொண்டன.

மழலையராக இணைந்து 12ஆம் ஆண்டை நிறைவுசெய்த மாணவர்கள், சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே அழைத்துவரப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர். மாணவர்களின் உரை, கவிதை, விடுதலைக் கானங்கள் மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகளுமாக நடைபெற்ற அகவை நிறைவு விழா, தாயகத்தின் விடியலுக்கான பற்றுறுதியோடு 19:00மணிக்குச் சிறப்பாக நிறைவுற்றது. எதிர்வரும் வாரங்களில் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப வகுக்கப்பட்டுள்ள ஏனைய நான்கு மாநிலங்களிலும் அகவை நிறைவு விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

error:
X